பெங்களூரு: காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் உடன்பாடு இல்லை என கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்னையில் தமிழக அரசுக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கர்நாடகாவுக்கு 14.75 டிஎம்சி தண்ணீரை கூடுதலாக பயன்படுத்தவும் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இதற்கு கர்நாடகா மாநில முதல் அமைச்சர் சித்தராமைய்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: காவிரி நதிநீர் பிரச்னையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளை கர்நாடகா அரசு ஏற்றுக் கொள்கிறது. தங்களது கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டாலும் சில கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு உள்ளன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு கார்நாடகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் முடிவில் கர்நாடகா அரசுக்கு உடன்பாடு இல்லை.
ஒரு வேளை காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைத்தாலும் அது தன்னிச்சையான முடிவாக இருக்கக்கூடாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் முன்பாக 4 மாநில அரசுகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அவர்களின் கருத்துகளை கேட்ட பிறகு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் முடிவை எடுக்க வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம் குறிப்பிட்ட நாட்களுக்குள் அமைக்க வேண்டும் என்று காலக்கெடு எதையும் உச்ச நீதிமன்றம் விதக்கவில்லை. ஆனால், ஊடங்கங்களில் காலக்கெடுகள் விதித்திருப்பதாக தவறான செய்திகள் வெளியானது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.