யாதும் ஊரே, யாவரும் கேளிர்.. ஐ.நா.வில் தமிழில் முழங்கிய மோடி..

No mention of Pak in PMs speech, Imran Khans address all about Kashmir

by எஸ். எம். கணபதி, Sep 28, 2019, 13:16 PM IST

ஐ.நா.சபை பொதுக் குழு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் போது ஒரு முறை கூட பாகிஸ்தான் என உச்சரிக்கவில்லை. யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று தமிழ் முழக்கத்தை குறிப்பிட்ட மோடி, புத்தரைத் தந்த நாடு இந்தியா என்று அமைதியை வலியுறுத்தி பேசினார்.

ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று(செப்.27) உரையாற்றினார். அப்போது அவர், ஒரு முறை கூட பாகிஸ்தான் என்று உச்சரிக்கவில்லை. அதே சமயம், தீவிரவாதம் என்பது உலகின் மிகப் பெரிய சவால் என்றார். அவர் பேசுகையில்...

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளோம். இந்தியாவின் 130 கோடி மக்களின் சார்பில் இங்கு உரையாற்றுகிறேன். மீண்டும் ஆட்சி அமைத்தது போல், இன்னொரு சிறப்பாக காந்தியின் 150வது ஆண்டு விழாவை இப்போது கொண்டாடுகிறோம்.

இந்தியாவில் 11 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகளை கட்டி, மிகப் பெரிய சுகாதாரத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம். 50 கோடி மக்களுக்கு சுகாதாரக் காப்பீடு அளித்துள்ளோம். 37 கோடி ஏழை மக்களுக்கு வங்கிக் கணக்கு ஏற்படுத்தித் தந்துள்ளோம்.
உலகிற்கு அமைதியை போதித்த புத்தர் பிறந்த பூமி இந்தியா. நாங்கள் போரை விரும்பவில்லை. தீவிரவாதத்துக்கு எதிராகவே குரல் கொடுத்து வருகிறோம். சுமார் 3000 வருடங்களுக்கு முன்பாக இந்தியாவில் வாழ்ந்த புலவர் கணியன் பூங்குன்றனார், உலகின் தொன்மையான தமிழ் மொழியில், யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்று பாடியுள்ளார். அனைத்து ஊரும் எல்லோருக்கும் சொந்தம். அனைவருமே எங்கள் உறவினர் என்பதுதான்.

தீவிரவாதம் என்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்திற்கும், மனித இனத்திற்கும் மிகப் பெரிய சவால். அதனால், ஒட்டுமொத்த உலகமும் தீவிரவாதத்திற்கு எதிராக திரள வேண்டும்.

இவ்வாறு மோடி பேசினார்.

பாகிஸ்தானைப் பற்றி பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஆனால், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், தனது உரையில் பல முறை காஷ்மீர் விவகாரத்தைப் பற்றியே பேசினார். இந்தியாவுடன் போர் மூண்டால் அதன் விளைவு மற்ற நாடுகளையும் பாதிக்கும் என்றெல்லாம் மிரட்டினார்.

You'r reading யாதும் ஊரே, யாவரும் கேளிர்.. ஐ.நா.வில் தமிழில் முழங்கிய மோடி.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை