சுதந்திரம் என்பது போராட்டத்தின் முடிவல்ல என்று திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரம், காந்திஜெயந்திநாளன்று ட்விட் போட்டிருக்கிறார்.
ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு ரூ.305 கோடி வெளிநாட்டு முதலீடு வந்ததில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதாகி, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதில் முறைகேடு செய்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது, சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவர் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.
திகார் சிறையில் அடைக்கப்பட்ட சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், எனது சார்பில் குடும்பத்தினரை என் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடக் கூறியுள்ளேன். ஒரு டஜன் அதிகாரிகள், ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு அனுமதி வழங்கியதில் முடிவெடுத்த போது உங்களை மட்டுமே கைது செய்திருக்கிறார்களே, கடைசியாக நீங்கள் கையெழுத்திட்டதால்தானா? என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். எனது பதில், எந்த அதிகாரியும் தப்பு செய்யவில்லை. ஒருவரையும் கைது செய்யக் கூடாது என்பதுதான் என் நிலை என்று குறிப்பிட்டார்.
இதன்பிறகு, பல முறை நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றியும், மோடி அரசைப் பற்றியும் விமர்சித்து அவர் கருத்துக்களை ட்விட்டரில் பதிவு செய்து வருகிறார். இந்நிலையில், காந்திஜெயந்தியை ஒட்டி அவர் பதிவிட்ட கருத்துக்கள் வருமாறு:
காந்தியின் 150வது பிறந்த நாளில் அவருக்கு மரியாதையையும், அஞ்சலியையும் செலுத்துகிறேன்.
19ம் நூற்றாண்டு வரலாற்றில் முழுக்க அடிமைத்தனம்தான் இடம் பெற்றது. மன்னன் எந்த தவறும் செய்ய மாட்டான் என்பதே சரியானதாக கூறப்பட்டது. 20ம் நூற்றாண்டில் ஜனநாயக விதைகள் தூவப்பட்டு, ஜனநாயகம் மலர்ந்தது. நூற்றுக்கணக்கான நாடுகளுக்கும், லட்சக்கணக்கான மக்களுக்கும் விடுதலையைத் தந்தது.
ஆனால், 21ம் நூற்றாண்டில் ஜனநாயகம் வீழ்ச்சியடைந்து கொண்டே இருக்கிறது. வரிசையாக ஒவ்வொரு நாட்டிலும் ஜனநாயகம் விழுங்கப்பட்டு வருகிறது. வெனிசுலா, ரஷ்யா, மியான்மர், துருக்கி, ஹங்கேரி மற்றும் அமெரிக்காவிலும் கூட. இந்தியா எந்த வழியில் செல்லப் போகிறது?
சுதந்திரம் என்பது போராட்டத்தின் முடிவல்ல. அனுதினமும் விழிப்புடன் இருப்பதே விடுதலைக்கு கொடுக்கும் விலையாக இருக்கும்.
இவ்வாறு சிதம்பரம் கூறியுள்ளார். ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் தேர்தலில் முறைகேடுகள் செய்து அதிபரே மீண்டும் சர்வாதிகாரமாக பதவியேற்றிருப்பதை சுட்டிக்காட்டி, மத்திய பாஜக அரசும் அந்த வழியில் செல்வதாக சிதம்பரம் மறைமுகமாக குறிப்பிட்டிருக்கிறார்.