காந்தி 150வது பிறந்த நாளுக்கு 150 ரூபாய் நாணயம் வெளியீடு..பிரதமர் மோடி வெளியிட்டார்

Oct 2, 2019, 21:41 PM IST

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தையொட்டி, 150 ரூபாய் சிறப்பு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தையொட்டி, இன்று(அக்.2) மாலை குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு பிரதமர் மோடி வந்தார். சபர்மதி நதிக் கரையில் அமைந்துள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு அவர் சென்றார். மகாத்மா காந்தி வாழ்ந்த இல்லமான சபர்மதி ஆசிரமத்தில் அங்குள்ள காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தார். அங்குள்ள அருங்காட்சியகத்தை பார்வையிட்ட மோடி, அங்குள்ள வருகைப் பதிவேட்டில் குறிப்பு எழுதினார். மகாத்மாவின் 150வது பிறந்த நாளில் அங்கு வந்திருப்பதற்கு மகிழ்ச்சியை தெரிவித்து, இந்தியாவில் திறந்தவெளி கழிப்பிடங்களை ஒழித்தது குறித்தும் குறிப்பிட்டார்.

பின்னர், ஆசிரம வளாகத்தில் நடைபெற்ற தூய்மை இந்தியா நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில், குஜராத் மாநில முதல்வர் விஜய் ருபானி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் அவரது உருவம் பொறிக்கப்பட்ட 150 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.

மோடி பேசுகையில், இன்று மகாத்மாவின் 150வது பிறந்த நாளை உலகம் முழுவதும் கொண்டாடுகிறார்கள். சமீபத்தில் ஐ.நா.சபையில் சிறப்பு தபால் தலை வெளியிட்டனர். இப்போது இங்கே தபால் தலை மற்றும் சிறப்பு நாணயத்தை வெளியிட்டிருக்கிறோம். சுத்தம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விலங்குகள் பாதுகாப்பு ஆகியவை மகாத்மாவுக்க பிடித்தமான விஷயங்கள். இதற்கு ஆபத்தாக உள்ள ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை வரும் 2022ம் ஆண்டுக்குள் முழுமையாக ஒழித்து விட வேண்டும்என்றார்.

இதன்பின்னர், அகமதாபாத்தில் நடைபெற்ற நவராத்திரி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று வழிபாடு நடத்தினார்.


More India News