மகாத்மா காந்தியைப் பற்றி பேசுவதற்கு முன்பு, அவருடைய உண்மை வழியை பாஜகவினர் பின்பற்ற வேண்டுமென்று பிரியங்கா காந்தி அறிவுரை கூறியிருக்கிறார்.
காந்தியின் 150வது பிறந்த நாளையொட்டி, இன்று உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பாதயாத்திரை நடைபெற்றது. சாகித் சமராக்கில் இருந்து ஜிபிஓ பார்க் வரை யாத்திரை நடைபெற்று, அங்கு காந்தி அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பாதயாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், பாஜகவினர், காந்தியைப் பற்றி பேசுவதற்கு முன்பு அவரது உண்மை வழியை பின்பற்றி நடக்க வேண்டும். உத்தரப்பிரதேசத்தில் பெண்கள் மீது வன்கொடுமைத் தாக்குதல் நடைபெற்று வருகின்றன. அவர்கள் அதை எதிர்த்து குரல் கொடுத்தால், ஒடுக்கப்படுகிறார்கள். நாம் அதை எதிர்த்து போராட வேண்டும் என்றார்.
ஜிபிஓ பார்க்கில் காந்தி அஞ்சலி நிகழ்ச்சி முடிந்ததும், காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்கு பிரியங்கா காந்தி திட்டமிட்டிருந்தார். ஆனால், அவருக்கு ஏற்கனவே காய்ச்சலாக இருந்ததால், யாத்திரை மற்றும் அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு, டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். இதனால், ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டது.