வீடு, வாகனக் கடனுக்கான வட்டி விகிதம் குறையும்.. ரிசர்வ் வங்கி ரெப்போ குறைப்பு...

Rbi cuts repo rate to boost growth

by எஸ். எம். கணபதி, Oct 4, 2019, 14:06 PM IST

ரிசர்வ் வங்கி தனது காலாண்டு கூட்டத்தில், ரெப்போ விகிதத்தை மேலும் 0.25 சதவீதம் குறைக்க முடிவு செய்துள்ளது. இதனால், வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டிவிகிதம் குறையும் எனத் தெரிகிறது.

ரிசர்வ் வங்கியின் காலாண்டு நிதிக் கொள்கைக் கூட்டம், இன்று மும்பையில் நடைபெற்றது. ரிசர்வ் வங்கித் தலைவர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடந்த கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை மேலும் குறைக்க முடிவு செய்யப்பட்டது.

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய கால கடன்கள் மீதான வட்டி விகிதமே ரெப்போ என்று கூறப்படுகிறது. இந்த வட்டி விகிதத்தை குறைக்கும் போது, வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு வட்டிவிகிதத்தை குறைப்பதுண்டு.

தற்போது, ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன்மூலம், ரெப்போ வட்டி தற்போதுள்ள 5.4 சதவீதத்தில் இருந்து 5.15 சதவீதமாகக் குறைந்துள்ளது. தொடர்ந்து 5வது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.

இதைத் தொடர்ந்து, வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் குறைப்பதற்கான வாய்ப்புள்ளது. குறிப்பாக, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பெரிய வங்கிகள், வட்டி விகிதத்ததை குறைக்கும்.

More India News