நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் குறித்து பிரதமர் மோடிக்கு பகிரங்க கடிதம் எழுதிய டைரக்டர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்பட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் உள்பட சில மாநிலங்களில் முஸ்லிம்கள், தலித் மக்கள் உள்பட சிறுபான்மையினர் தாக்கப்படும் சம்பவங்கள் நடைபெற்றன. குறிப்பாக, இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பசு பாதுகாப்பு என்ற பெயரில், மாட்டிறைச்சி உண்போரை கடுமையாக தாக்கிய செய்திகள் வெளியாகின. பிரதமர் மோடியும் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கடந்த ஜூலை மாதத்தில் அடூர் கோபாலகிருஷ்ணன், டைரக்டர் மணிரத்னம், நடிகை ரேவதி, அபர்னா சென், அனுராக் காஸ்யப், வரலாற்று அறிஞர் ராமச்சந்திர குஹா உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 49 பிரபலங்கள் கையெழுத்திட்டு, பிரதமர் மோடிக்கு ஒரு பகிரங்கக் கடிதம் அனுப்பினர்.
அந்த கடிதத்தில் அவர்கள், நாட்டில் சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாகவும், வன்முறைகளை ஏவியவர்கள் மீது சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினர். மேலும், பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தில் பேசினால் போதாது, குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
இதைத் தொடர்ந்து, கங்கனாராவத், விவேக் அக்னிகோத்ரி உள்பட 62 பேர், அந்த 49 பேருக்கு பதிலளிக்கும் விதமாக பகிரங்க கடிதம் வெளியிட்டனர். அதில், அந்த 49 பேரும் வேண்டுமென்றே வெறுப்பூட்டும் வகையில் செயல்படுவதாகவும், பிரதமரின் மீது களங்கம் கற்பிப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தனர்.
இந்நிலையில், பீகார் மாநிலம் முசாபர்நகரில் வக்கீல் சுதீர் ஓஜா என்பவர், தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், பிரதமருக்கும், நாட்டிற்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் பகிரங்க கடிதம் வெளியிட்ட மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பேர் மீது இ.பி.கோ. சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் சூர்யகாந்த், இதை ஏற்று உத்தரவு பிறப்பித்தார். இதைத் தொடர்ந்து, முசாபர்நகரில் உள்ள சதார் போலீஸ் நிலையத்தில் ஒரு எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 ேபர் மீதும் தேசத் துரோகப் பிரிவிலும், இ.பி.கோ. பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை வக்கீல் ஓஜா தெரிவித்துள்ளார். இந்த வழக்கின் விசாரணைக்கு விரைவில் 49 பேருக்கும் சம்மன் அனுப்பப்படும் என்று தெரிகிறது.