49 பேர் மீது தேசத்துரோக வழக்கை வாபஸ் பெற ஸ்டாலின் கோரிக்கை..

m.k.stalin condemns the sedition case against 49 celebrities

Oct 6, 2019, 08:00 AM IST

மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 மீது தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கை திரும்பப் பெற வேண்டுமென்று பிரதமருக்கு ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை வருமாறு:

சிறுபான்மையினருக்கு எதிரான, கும்பல் வன்முறையைத் தடுத்து நிறுத்துங்கள் என்றும், மத நல்லிணக்கத்தையும் சகிப்புத்தன்மையையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுங்கள் என்றும் பிரதமருக்குக் கடிதம் எழுதிய, புகழ்வாய்ந்த பல்துறைப் பிரமுகர்கள் 49 பேர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்திருப்பதற்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா, இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி, இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன், நடிகர் சௌமித்ரா சாட்டர்ஜி போன்ற கலை - அறிவுலகச் சான்றோர்களை எல்லாம் தேசத் துரோகிகள் என்று முத்திரை குத்த நினைப்பதை எவராலும் ஏற்றுக் கொள்ள இயலாது; சமூக அக்கறை உள்ள அத்தகைய முன்னோடிகளை தேசத் துரோகிகள் என்று சொல்வதை விடப் பேரபாயம் வேறு எதுவும் இருக்க முடியாது; இது மிகவும் வெறுத்து ஒதுக்க வேண்டிய முன்னுதாரணம் ஆகும்.

அரசியல் சட்டத்தின் அடிப்படை நோக்கங்களாக இருக்கும், மத நல்லிணக்கத்தையும் சகிப்புத்தன்மையையும் நிலைநாட்டுங்கள் என்று கூறுவது, எப்படி தேசத் துரோகமாகும்? இது எத்தகைய கொடுமை?

நாம், ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா என்ற அய்யப்பாட்டையும் அச்சத்தையும் ஒவ்வொரு குடிமகனின் உள்ளத்திலும் ஏற்படுத்தி, பா.ஜ.க. அரசின் எதிர்மறைச் செயல்பாடுகள் பற்றிப் பேச விடாமல் வாய்ப்பூட்டு போடும் இந்த முயற்சி கண்டனத்திற்குரியது.

சர்வாதிகாரத்தை கையில் எடுத்தவர்கள்,அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டவர்கள், கருத்துச் சுதந்திரத்திற்கு கைவிலங்கு போட்டவர்கள் எல்லாம் ஜனநாயகத்தின் முன்பு இதுவரை படுதோல்வி அடைந்ததுதான் வரலாறு என்பதை, மத்தியில் இருக்கும் பா.ஜ.க. அரசு உணர வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி இதை உணர்ந்து, 49 பேருக்கு எதிரான தேச துரோக வழக்கினை உடனடியாகத் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து, இந்திய ஜனநாயகத்தையும், அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளையும் காப்பாற்றிட வேண்டும்

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

You'r reading 49 பேர் மீது தேசத்துரோக வழக்கை வாபஸ் பெற ஸ்டாலின் கோரிக்கை.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை