பிரான்ஸ் சென்றிருக்கும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று முதலாவது ரபேல் போர் விமானத்தைப் பெற்று கொள்கிறார்.
பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்க கடந்த 2016ஆம் ஆண்டில் ரூ.60 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ரபேல் போர் விமானங்கள் வாங்குவதில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. டசால்ட் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில் ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மத்திய அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு என்றும் இந்து ஆங்கில நாளிதழில் என்.ராம் எழுதி வந்தார். இது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடியானது.
இந்நிலையில், முதலாவது ரபேல் போர் விமானத்தை அதிகாரப்பூர்வமாக பெறுவதற்காக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நேற்று பிரான்ஸ் தலைநகர் பாரீசுக்கு புறப்பட்டு சென்றார். இன்று பாரீசில் அவர் அந்நாட்டு பிரதமர் இ்ம்மானுவேல் மேக்ரானை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேசுகிறார். பின்னர், மெரிக்னா விமானத்தளத்தில் முதலாவது ரபேல் விமானத்தை அதிகாரப்பூர்வமாக பெற்றுக் கொள்கிறார். நாளை நமது விமானப்படை நாள் என்பதுடன் தசரா பண்டிகை நாளாகும். முதலாவது விமானத்தை பெறுவதற்கு முன்பாக சாஸ்திர பூஜைகள் செய்து பெறப்படும் என்று விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்
ராஜ்நாத்சிங்குடன் விமானப்படை துணை தலைமை தளபதி எச்.எஸ்.அரோராவும் சென்றிருக்கிறார். நாளை அதிகாரப்பூர்வமாக முதலாவது ரபேல் விமானம் தரப்பட்டாலும், விமானிகள் பயிற்சி எல்லாம் முடிந்து அடுத்த ஆண்டு மே மாதத்தில்தான் அது விமானப்படையில் முழுவீச்சில் பயன்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். பிரான்சில் நாளை விமானக் கம்பெனிகளின் தலைமை நிர்வாகிகள் கூட்டத்திலும் ராஜ்நாத்சிங் கலந்து கொள்கிறார். மேக் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு அவர் அழைப்பு விடுக்கவுள்ளார்.