சீரியல் கில்லர் ஜோலி தாமஸ்.. இன்னும் எத்தனை கொலையோ? கேரள போலீஸ் திடுக்கிடும் தகவல்..

Keralas serial killer Jolly Joseph planned more murders

by எஸ். எம். கணபதி, Oct 9, 2019, 13:38 PM IST

கேரளாவில் தனது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை சயனைடு கொடுத்து கொலை செய்த ஜோலி, மேலும் சிலரை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கேரளாவில் எப்போதும் ஏதோ ஒரு கிரைம் செய்தி, தொலைக்காட்சி தொடர் போல் நீண்டு கொண்டே இருக்கும். சரிதா நாயரின் சோலார் பேனல் ஊழலில், காங்கிரஸ் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி முதல் பலரைப் பற்றிய செய்திகள் வந்தவண்ணம் இருந்தது. அந்த சமயத்தில் சரிதா நாயரின் ஆபாச வீடியோக்கள் எல்லாம் வெளி வந்தன.
இப்ேபாது கேரளாவை கலக்கி வருவது சயனைடு கொலைகாரி ஜோலி செய்திதான்.

கோழிக்கோடு மாவட்டம், தாமரச்சேரி கூடத்தாயி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் டோம் தாமஸ்(66) இவரது மனைவி அன்னம்மா(57) ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர்களுக்கு ராய் தாமஸ், ரோஜோ என்று 2 மகன்களும், ரெஞ்சி என்ற மகளும் உண்டு. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ராய் தாமஸ், இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ஜோலி ஜோசப்(47) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

டோம் தாமஸ் வீட்டில் அன்னம்மாவிடம்தான் மொத்த அதிகாரமும், குடும்பச் சொத்துக்களும் இருந்தது. அதை அபகரிக்க வேண்டுமென்று நினைத்த ஜோலி, கடந்த 2002ம் ஆண்டில் சூப்பில் சயனைடு விஷம் கலந்து, மாமியாருக்கு கொடுத்தார். அதை குடித்த அன்னம்மா இறந்து விட்டார். அவர் மாரடைப்பில் இறந்து விட்டதாக எல்லோரும் நினைத்தனர். இறப்பில் யாருக்கும் சந்தேகம் வராததால், அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பாமல் புதைத்து விட்டனர்.

இதற்கு பின், மாமனாரையும் குளோஸ் பண்ணி விட்டால் சொத்துக்கள் தன் கைக்கு வந்து விடும் என்று கணக்கு போட்ட ஜோலி சில ஆண்டுகள் காத்திருந்தனர். கடந்த 2008 ஆண்டில் கிழங்கு வேக வைத்து அதற்குள் சயனைடு கலந்து கொடுத்து மாமனாரை கொலை செய்தார். இந்த கொலையிலும் யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை.
அதன்பின்பு, ேஜாலி, கடந்த 2011ம் ஆண்டில் கணவர் ராய் தாமஸுக்கும் சாப்பாட்டில் சயனைடு கலந்து வைத்தார்.

அவரும் சாப்பிட்ட சில மணி நேரத்தில் இறந்தார். அப்போதுதான் முதல் முறையாக ராய் தாமஸின் தம்பி மாத்யூவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதனால், ராய் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, அவரது உடலில் சயனைடு கண்டறியப்பட்டாலும், அவராகவே சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதி வழக்கு முடிக்கப்பட்டது.

ஆனாலும் மாத்யூவுக்கு சந்தேகம் தீரவில்ைல.
அவரால் தனக்கு எப்போது வேண்டுமானாலும் பிரச்னை வரலாம் என்று நினைத்த ஜோலி, அவரையும் 2014ல் சயனைடு கொடுத்து கொலை செய்தார். இதற்குப் பின்பும் அவரை போலீசார் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில், மாமனார் டோம் தாமஸின் சகோதரர் மகனான ஷாஜு சக்கரியாஸ் மீது ஜோலிக்கு மோகம் ஏற்பட்டது. அவரை அடைய விரும்பினார்.

அதற்காக ஒரு சதித் திட்டம் போட்டார். ஷாஜுவின் மனைவி சிலி, அவர்களுடைய ஒன்றரை வயது மகள் ஆல்பைன் ஆகியோரையும் சயனைடு கொடுத்து தீர்த்து கட்ட நினைத்தார் ஜோலி. முதலில் ஆல்பைனை சமயம் பார்த்து சயனைடு கலந்த பால் கொடுத்து தீர்த்து கட்டினார். அதே ஆண்டில், அன்னம்்மாவின் சகோதரர் மாத்யூவையும் ஒரு நாள் சயனைடு கொடுத்து சாகடித்தார்.

அதை அடுத்து 2 ஆண்டுகள் காத்திருந்து 2014ம் ஆண்டில் ஷாஜுவின் மனைவி சிலியை போட்டு தள்ளினார். ஷாஜு, சிலி, ஜோலி ஆகியோர் ஒரு பல் மருத்துவமனைக்கு சென்றிருந்தனர். அப்போது மருத்துவமனைக்குள் ஷாஜு இருந்த போது சிலியும், ஜோலியும் வெளியே காத்திருந்தனர். அப்போது குளிபானம் வாங்கி, அதில் சயனைடு கலந்து கொடுத்து சிலியிடம் கொடுத்தார்.

அவரும் அதை அருந்திய சில நிமிடங்களில் வாயில் நுரை தள்ளி சரிந்தார். உடனே அலறியடித்து கொண்டு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் இறந்து விட்டார் என்று உடலை வீட்டுக்கு கொண்டு போக வைத்து விட்டார் ஜோலி.
சில மாதங்கள் கழித்து ஜோலி திட்டமிட்டபடி ஷாஜுவை திருமணம் செய்து கொண்டார். ஒரே குடும்பத்தில் பலரும் மரணம் அடைந்திருந்தாலும் ஆண்டுக்கணக்கில் இடைவெளி இருந்ததால் பொது மக்களிடம் சந்தேகம் ஏற்படவில்லை. இதற்கிடையே, ஜோலியின் முதல் கணவர் ராய் தாமஸ் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு முடிக்கப்பட்டாலும் அவருக்கு எப்படி சயனைடு கிடைத்தது என்பதற்கு விடை தெரியாமல் போலீசார் மீண்டும் அந்த வழக்கை துருவித் துருவி விசாரித்தனர்.

இதில்தான் ஜோலி சிக்கி விட்டார். அவருக்கு சயனைடு வாங்கிக் கொடுத்த மாத்யூ, பிரஜிகுமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். தற்போது ஜோலியைப் பற்றி பல கதைகள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. கோழிக்கோடு ரூரல் எஸ்.பி. சைமன் கூறுகையில், ஜோலி மேலும் சிலரை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது. அதை அவரே ஒப்புக் கொண்டார். அதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. விரைவில் மேலும் சிலரும் இந்த வழக்கில் சிக்குவார்கள் என்றார்.

கேரள டிஜிபி லோக்நாத் பெகுரா கூறுகையில், அன்னம்மா, டாம் தாமஸ் உடல்களை தோண்டி எடுத்து ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. பல ஆண்டுகளாகி விட்டதால், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் உள்ள ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்பி சோதிக்க முடிவு செய்திருக்கிறோம் என்றார்.

You'r reading சீரியல் கில்லர் ஜோலி தாமஸ்.. இன்னும் எத்தனை கொலையோ? கேரள போலீஸ் திடுக்கிடும் தகவல்.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை