மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளிப் பரிசாக ஒரே தவணையில் அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இது தீபாவளி பரிசு என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
விலைவாசி உயர்வைக் கணக்கில் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கப்பட்டால், தமிழக அரசும் அதே சதவீதத்தில் அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு ஊழியர்களுக்கு அளிக்கும். இது நீண்டகாலமாக பின்பற்றப்பட்டு வருகிறது.
கடைசியாக, கடந்த பிப்ரவரி 20ம் தேதியன்று மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, மே20ம் தேதியன்று தமிழக அரசு ஊழியர்களுக்கும் 12 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டது. இது கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு தரப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி பெரும்பாலும் 3 அல்லது 4 சதவீதம்தான் உயர்த்தப்படும். இம்முறை வரும் 21ம் தேதி தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தப்படுகிறது. இது ஜூலை 1ம் தேதி முதல் கணக்கிட்டு தரப்படும்.
பிரதமரின் விவசாயிகள் மேம்பாட்டு நிதித் திட்டத்தில் பயன் பெறுவதற்கு ஆதார் தேவையில்லை என்ற சலுகை நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தி தரப்பட்டதால், தமிழக அரசு ஊழியர்களுக்கும் அதே 5 சதவீத உயர்வு அறிவிக்கப்படும். தமிழக அரசு ஊழியர்களுக்கும் தீபாவளி பரிசாக இந்த 5 சதவீத உயர்வை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தீபாவளிக்கு முன்பே அறிவிப்பாரா என்று ஊழியர்கள் எதிர்பார்த்துள்ளனர்.