7 மாதங்களில் பொருளாதாரம் மேலும் மோசமடையும்.. மோடி அரசு மீது ராகுல் காட்டம்.

by எஸ். எம். கணபதி, Oct 14, 2019, 09:44 AM IST
Share Tweet Whatsapp

மோடி அரசு நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து கொண்டிருக்கிறது. அடுத்து வரும் 6, 7 மாதங்களில் பொருளாதாரம் இன்னும் மோசமடையும் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவில் வரும் 21ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இங்கு பாஜக-சிவசேனா கூட்டணியும், காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. பாஜக அணிக்கு பிரதமர் மோடியும், காங்கிரஸ் அணிக்கு ராகுல்காந்தியும் நேற்று ஒரே நேரத்தில் பிரச்சாரம் செய்தனர். லத்தூர் மாவட்டத்தில் அவுசா என்ற இடத்தில் ராகுல்காந்தி பிரச்சாரம் செய்தார் அவர் பேசியதாவது:

மன்மோகன்சிங்கும், காங்கிரஸ் அரசும் பல ஆண்டுகளாக போராடி ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வந்த பொருளாதார நிலையை, இன்று மோடி அரசு சீரழித்து கொண்டிருக்கிறது. இன்னும் 6, 7 மாதங்களில் நாட்டின் பொருளாதாரம் மேலும் மோசமடையும் வாய்ப்பு உள்ளது. ஆனால், மோடியும், அவரது கட்சியும் நாட்டில் உள்ள பிரச்னைகளை பற்றி கவலைப்படாமல், அவற்றை திசைதிருப்புகிறார்கள். பிரிவு 370ஐ பற்றியும், சந்திரயானைப் பற்றியும் பேசி, மக்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள்.

இளைஞர்கள் வேலை கேட்டால், சந்திரனைப் பார் என்கிறார்கள். சந்திரயான் திட்டத்துக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு அனுமதி, விஞ்ஞானிகள் கடுமையாக உழைத்தார்கள். ஆனால், இப்போது மோடி அதற்கான பெருமையை முழுமையாக எடுத்து கொள்ள ஆசைப்படுகிறார்.
சீன அதிபர் ஜின்பிங்குடன் 2 நாட்கள் மோடி பேசினாரே! அவரிடம் கடந்த ஆண்டில் இந்தியாவின் டோக்லாம் பகுதிக்குள் சீன படைகள் ஏன் ஊடுருவி வந்தன என்று மோடி கேட்டாரா?

இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.


Leave a reply