காஷ்மீர் பிரச்னையில் முதலைக் கண்ணீர் வடித்து மக்களை ஏமாற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு, பிரிவு 370ஐ திரும்ப கொண்டு வருவோம் என்று சொல்ல தைரியம் இருக்கிறதா என்று பிரதமர் மோடி கேட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் வரும் 21ம் தேதியன்று சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, ஜலகானில் பிரதமர் மோடி இன்று(அக்.13) பாஜக-சிவசேனா கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அவர் பேசியதாவது:
காஷ்மீர் பிரச்னையில் எதிர்க்கட்சித் தவைர்கள் முதலைக் கண்ணீர் வடித்து மக்களை ஏமாற்றுகிறார்கள். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ திரும்பக் கொண்டு வருவோம் என்று சொல்லும் தைரியம் அவர்களுக்கு இருக்கிறதா?
ஜம்மு காஷ்மீரையும், லடாக்கையும் ஒரு துண்டு நிலமாக நாங்கள் பார்க்கவில்லை. அவை இந்தியாவுக்கு கிரீடம் போன்றது. காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்த பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அங்கு சகஜ நிலை திரும்புவதற்கு எங்களால் இயன்ற அளவுக்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
காஷ்மீரில் வால்மீகி இனத்தவர்களின் உரிமைகள் பிரிவு 370 இருந்ததால் பறிக்கப்பட்டன. இப்போது அவர்களின் உரிமைகள் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மோடி பேசினார்.