பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் அபிஜித் பானர்ஜி கடந்த 5 ஆண்டுகளாக தமிழக அரசுடன் இணைந்து பல திட்டங்களை செயல்படுத்த உதவி வருகிறார்.
இந்த ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு, அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான அபிஜித் பானர்ஜி, அவரது மனைவி எஸ்தர் டப்லோ மற்றும் மைக்கேல் கிரமர் ஆகியோருக்கு பிரித்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக பணியாற்றும் அபிஜித் பானர்ஜி, அவரது மனைவி எஸ்தர் டப்லோ மற்றும் சக ஆய்வாளர் மைக்கேல் கிரமர் ஆகியோர் உலகளாவிய வறுமை ஒழிப்புக்கான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பல திட்டங்களை வகுத்ததற்காக நோபல் பரிசை வென்றுள்ளனர்.
நோபல் வென்ற அபிஜித் பானர்ஜியும், மனைவி எஸ்தர் டப்லோவும், செந்தில் முல்லைநாதன் என்பவருடன் இணைந்து அப்துல் லத்தீப் ஜலீல் வறுமை ஒழிப்பு ஆய்வகம் என்ற அமைப்பை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் வறுமை ஒழிப்புக்கு எந்தவிதமான கொள்கைகளை வகுக்க வேண்டும் என்று முன்னுரிமை திட்டங்களை வகுப்பதற்காக இந்த அமைப்பை பயன்படுத்திக் கொள்வோம் என்று கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பரில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
அதன்பின், முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இருந்த போது தமிழக அரசு, அபிஜித் பானர்ஜியின் அமைப்புடன் ஒப்பந்தம் செய்தது. அது முதல், கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக அரசுடன் அந்த அமைப்பும் இணைந்து பணியாற்றுகிறது.
இது குறித்து, தமிழக நிதித் துறை செயலாளர் கிருஷ்ணன் கூறுகையில், உலக அளவில் பொருளாதாரத்தில் சிறந்து விளங்குபவர்களுடன் தமிழக அரசு இணைந்து செயல்படுவது பெருமைக்குரியது. பல்வேறு திட்டங்களில் அவர்கள் இணைந்து செயல்படுகிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.