பாங்காக், தாய்லாந்து, வியட்நாம்.. ராகுலை கிண்டலடித்த மோடி..

by எஸ். எம். கணபதி, Oct 15, 2019, 18:04 PM IST

பாங்காக், தாய்லாந்து, வியட்நாம்... எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள்... என்று பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தின் போது, மறைமுகமாக ராகுல்காந்தியை கிண்டலடித்தார்.

மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் அக்.21ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த மாநிலங்களில் ஆளும் பாஜக கூட்டணிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே போட்டி நிலவுகிறது. மகாராஷ்டிராவில் 2 நாட்கள் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி, கடந்த 2 நாட்களாக அரியானாவில் பிரச்சாரம் செய்து வருகிறார்.

அரியானா மாநிலம் சார்கி தாத்ரி பகுதியில் அவர் இன்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் பிரிவு 370ஐ ரத்து செய்ததற்கு நாடு முழுவதும் மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். ஆனால், இந்த விஷயத்தில் சில காங்கிரஸ் தலைவர்கள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.
பாங்காக், தாய்லாந்து, வியட்நாம் என்று எங்கு வேண்டுமானாலும் நீங்கள்(ராகுல்) செல்லுங்கள். என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். ஆனால், முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும் இந்தியாவின் முதுகில் குத்தாதீர்கள்..

இவ்வாறு மோடி பேசினார். அவர் யாரையும் பெயர் சொல்லி குறிப்பிடாவிட்டாலும் ராகுல்காந்தியைத்தான் கிண்டலடிக்கிறார் என்பது வெளிப்படையாக தெரிந்த விஷயம். காரணம், ராகுல்காந்தி ஏற்கனவே பாங்காக் போய் விட்டு வந்தார். சமீபத்தில் கூட அவர் திடீரென வெளிநாட்டுக்கு போய் விட்டார். பிரச்சாரத்திற்கு அவர் வருவாரா என்று கூட பாஜக தலைவர்கள் கிண்டலடித்தனர்.

குறிப்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அரியானாவில் கடந்த வாரம் பிரச்சாரம் செய்த போது, இங்கு தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆனால், ராகுல்காந்தி விடுமுறையில் வெளிநாட்டுக்கு போய் விட்டார். ராகுல்காந்தி இங்கு(அரியானா) வந்து அரசியல்சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதில் தனது நிலையை மக்களுக்கு சொல்ல வேண்டும் என்று கூறியிருந்தார்.


More India News