கொல்கத்தாவில் நடந்த பூஜை விழாவில் முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலையில் தான் அவமதிக்கப்பட்டதாக அம்மாநில கவர்னர் ஜக்தீப் தங்கர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் கட்சி ஆட்சி நடைபெறுகிறது. அம்மாநில கவர்னர் ஜக்தீப் தங்கர், முதல்வர் மம்தா மற்றும் பல முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்ட துர்கா பூஜை விழா கடந்த 11ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் மற்றும் இதர முக்கியப் பிரமுகர்களுக்கு தனி மேடையும் அமைக்கப்பட்டிருந்தது. இதனால், தன்னை திட்டமிட்டு அரசு அவமானப்படுத்தி விட்டதாக கவர்னர் குற்றம்சாட்டியுள்ளார்.
இன்று அவர் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், என்னை வேண்டுமென்றே திட்டமிட்டு அழைத்து தனி மேடையில் அமர வைத்தனர். மேலும் தொலைக்காட்சி ஒளிபரப்புகளிலும் என்னை காட்டவில்லை. இந்த சம்பவம், கடந்த மூன்று நாட்களாக என் மனதில் தீராத வடுவை ஏற்படுத்தி விட்டது. மாநிலத்தின் முதல் குடிமகனாகிய என்னை இப்படி அவமதித்ததை மேற்கு வங்க மக்கள் விரும்ப மாட்டார்கள். என்னை அவமதித்தது மக்களை அவமதித்ததாகும். மேற்கு வங்க கலாச்சாரத்தை அவமரியாதை செய்ததாகும் என்றார்.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்த பிறகு, மேற்கு வங்கத்தில் பாஜகவினர், திரிணாமுல் அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ அடிக்கடி அரசுடன் மோதி வருகிறார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரை ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் கெரோ செய்தனர். ஆளும் திரிணாமுல் கட்சிதான் இதை திட்டமிட்டு செய்ததாக கூறப்பட்டது.
அப்போது, கவர்னர் தங்கர் திடீரென அங்கு வந்து அமைச்சரை விடுவித்தார்.
அதே போல், முர்சிதாபாத்தில் மூன்று பேர் கொலை செய்யப்பட்டதில், திரிணாமுல் கட்சியினருக்கு தொடர்பு உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இது பற்ற சமீபத்தில் கருத்து தெரிவித்த கவர்னர், சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டதாக கடுமையாக விமர்சித்தார். இந்த சூழலில்தான், மம்தா அரசு கவர்னருக்கு இப்படி அவமதிப்பு செய்துள்ளதாக பேசப்படுகிறது.
ஏற்கனவே தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி நடைபெற்ற போது, கவர்னர் சென்னாரெட்டி அந்த ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து, அவர் வெளியூர் சென்று விட்டு திரும்பும் போது, அவரது காரையே அதிமுகவினர் வழிமறித்து ஆர்ப்பாட்டம் செய்த சம்பவம் நடைபெற்றது. ஜெயலலிதாவும், மம்தாவும் எப்போதும் தங்கள் எதிர்ப்பை இப்படித்தான் காட்டுவார்கள்!