அயோத்தி வழக்கு விசாரணை.. மாலை 5 மணிக்கு முடியும்.. சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு

supreme court says Ayodhya hearing to end at 5 pm today

by எஸ். எம். கணபதி, Oct 16, 2019, 12:09 PM IST

அயோத்தி நிலப் பிரச்னை தொடர்பான வழக்கின் விசாரணை இன்று மாலை 5 மணியுடன் முடிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் அறிவித்தார். புதிய மனுவை ஏற்க நீதிபதிகள் மறுத்தனர்.

உத்தரபிரதேசத்தில் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய மூன்று அமைப்பினரும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர். நிலத்தைப் பிரித்து எடுத்து கொள்ளும் வகையில் அலகாபாத் ஐகோர்ட் கடந்த 2010ல் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 14 மேல்முறையீட்டு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்து வருகிறது.

விசாரணை தொடர்ந்து 25 வது நாளாக நடைபெற்ற போது, இன்னும் எத்தனை நாட்களில் விசாரணையை முடிப்பது? என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் கேள்வி எழுப்பினார். அதன்பின், வழக்கறிஞர்கள் கலந்தாலோசித்து கொடுத்த பட்டியலை தலைமை நீதிபதி ஆய்வு செய்தார். தொடர்ந்து, வழக்கு அக்டோபர் 18ம் தேதிக்குள் முடிக்கப்படும் என்று அவர் அறிவித்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, நாளைக்குள் அனைத்து தரப்பும் வாதங்களை முடிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, இன்று 40வது நாளாக தலைமை நீதிபதி ரஞ்சன்கோகய் தலைமையிலான அமர்வு முன்பாக வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. அப்போது புதிய மனு ஒன்றை தாக்கல் செய்வதற்கு கோரிக்கை எழுந்த போது அதை நீதிபதிகள் ஏற்கவில்லை. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் கூறுகையில், இவ்வளவு நீண்ட விசாரணையே போதும். இன்று மாலை 5 மணியுடன் வாதங்கள் முடிக்கப்படும். அதற்கு மேல் விசாரணை நடைபெறாது என்று அறிவித்தார். இதனால், இன்று மாலை 5 மணிக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு தள்ளி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், நவம்பர் 17ம்தேதி ஓய்வு பெறுகிறார். எனவே, அயோத்தி வழக்கில் அடுத்த ஒரு மாதத்திற்குள் தீர்ப்பு வெளியிடப்படும்.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>More India News

அதிகம் படித்தவை