மத்தியப் பிரதேசத்தில் உள்ள சாலைகள் அனைத்தும் 15 நாளில் ஹேமமாலினி கன்னங்கள் போல் மாறும் என்று காங்கிரஸ் அமைச்சர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் தற்போது முதலமைச்சர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக அங்குள்ள சாலைகள் குண்டும், குழியுமாக மாறி விட்டன. இது பற்றி நிருபர்கள் நேற்று போபாலில் அமைச்சர் பி.சி.சர்மாவிடம் கேட்டனர். அதற்கு அவர், வாஷிங்டன் சாலைகளை விட சிறப்பாக அமைக்கப்பட்ட சாலைகள் கனமழையால் குண்டும், குழியுமாக மாறி விட்டன.
விஜய்வர்கியா(பாஜக தலைவர்) கன்னங்கள் போல் இருக்கும் இந்த சாலைகள், 15 நாட்களில் ஹேமமாலினி கன்னங்கள் போல் மாறும். புதிய சாலைகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
ம.பி.யில் கடந்த 2017ம் ஆண்டில் பாஜக ஆட்சி இருந்தது. அப்போதைய முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், நான் வாஷிங்டனில் பார்த்த சாலைகளை விட மத்தியப் பிரதேசத்தில் சூப்பராக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டிருந்தார். அதை கிண்டலடிக்கும் விதமாகவே காங்கிரஸ் அமைச்சர் பி.சி.சர்மா இப்போது பேசியிருக்கிறார். ஆனால், அவர் ஹேமமாலினி கன்னம் என்று குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.