பீகாரில் ஐக்கிய ஜனதா தளம்- பாஜக கூட்டணி அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபைத் தேர்தலிலும் தொடரும். நிதிஷ்குமார்தான் மீண்டும் முதல்வர் வேட்பாளர் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கூட்டணியில் தொடர்ந்து பல சலசலப்புகள் நீடித்து வந்தது. தீவிர இந்துத்துவா கொள்கைகளில் நிதிஷ்குமாருக்கு உடன்பாடு இல்லை. இதனாலும் பல சர்ச்சைகள் எழுந்ததுண்டு.
இதன் காரணமாக, 2020ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் என்றும், மகாராஷ்டிராவில் சிவசேனாவை விட அதிக இடங்கள் பிடித்து பாஜக தலைமையில் ஆட்சி அமைத்தது போல், பீகாரிலும் பாஜக தலைமையில் ஆட்சி அமையும் என்றும் அக்கட்சியினர் பேசி வந்தனர்.
இந்நிலையில், பாஜக தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், பீகாரில் 2020ல் நடைபெறும் சட்டசபைத் தேர்தலிலும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி தொடரும். நிதிஷ்குமார்தான் மீண்டும் முதல்வர் வேட்பாளர் என்பதில் மாற்றம் இல்லை. அவரது தலைமையில்தான் கூட்டணி தொடரும் என்று கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.