ஜம்மு காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக், கோவா கவர்னராக மாற்றப்பட்டுள்ளார். காஷ்மீர் யூனியன் பிரதேச கவர்னராக கிரிஷ்சந்திர முர்மு நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜம்முகாஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. மேலும், ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் இருந்து லடாக் பிரிக்கப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, அம்மாநில முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்பட ஏராளமான தலைவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் கவர்னராக இருந்த சத்யபால் மாலிக் தற்போது கோவா கவர்னராக மாற்றப்பட்டுள்ளார். ஜம்முகாஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் கவர்னராக கிரிஷ்சந்திர முர்மு நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2010-14 வரை குஜராத்தில் மோடி அரசில் முதன்மைச் செயலாளராக பணியாற்றியவர். அதன்பின், பிரதமராக மோடி வந்ததும் மத்திய அரசு பணிக்கு வந்தார். தற்போது அவர் செலவினங்கள் துறை செயலாளராக பணியாற்றி வருகிறார்.
மேலும், லடாக் யூனியன் பிரதேசத்திற்கு ராதாகிருஷ்ண மாத்தூர் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திரிபுரா மாநில ஒதுக்கீட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி. கடைசியாக இவர் தலைமை தகவல் ஆணையராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.