அரியானாவில் கட்டார் மீண்டும் முதல்வராகிறார்.. சவுதாலா பேரன் துணை முதல்வர்..

Manohar Lal Khattar to be sworn in as Haryanas CM, to take oath tomorrow at Haryana Raj bhawan

by எஸ். எம். கணபதி, Oct 26, 2019, 20:57 PM IST

அரியானாவில் ஜனநாயக ஜனதா கட்சியின் ஆதரவுடன் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கிறது. முதல்வராக கட்டார் பொறுப்பேற்கிறார். சவுதாலா பேரன் துஷ்யந்த் துணை முதல்வராகிறார்.

அரியானாவில் மனோகர்லால் கட்டார் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்றது. கடந்த 21ம் தேதி அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற்று, அக்.24ம் தேதி முடிவுகள் வெளியாயின. அதில் பாஜகவுக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. தொங்கு சட்டசபை ஏற்பட்டது. பாஜக 40 இடங்களையும், காங்கிரஸ் 31 இடங்களையும், ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களையும், லோக்தளம், எச்.எல்.பி ஆகியவை தலா ஒரு தொகுதியையும் கைப்பற்றியுள்ளன. இது தவிர 7 சுயேச்சைகளும் வெற்றி பெற்றுள்ளனர்.

பாஜக ஆட்சி அமைக்க மேலும் 6 எம்.எல்.ஏ.க்கள் தேவைப்பட்டது. வெற்றி பெற்றுள்ள சுயேச்சைகளில் 5 பேர் பாஜகவில் சீட் கிடைக்காமல் அதிருப்தியில் சுயேச்சையாக போட்டியிட்டவர்கள். எனவே, அவர்களையும் மற்ற 2 சுயேச்சைகளையும் வளைத்தாலே பாஜக ஆட்சி அமைத்து விடலாம்.

இருந்தாலும், மதில் மேல் பூனை போல் இல்லாமல் உறுதியான ஆட்சி அமைக்க வேண்டும் என்று கருதிய பாஜக மேலிடம், ஜனநாயக ஜனதாவின் ஆதரவை எதிர்பார்த்தது. தேவிலாலின் மகன் ஓம்பிரகாஷ் சவுதலாவின் லோக்தளம்(ஐ.என்.எல்.டி) கட்சி கடந்த 2014ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 15 தொகுதிகளை கைப்பற்றியிருந்தது. அந்த கட்சியில் இருந்து குடும்பச் சண்டை காரணமாக சவுதாலாவின் பேரன் துஷ்யந்த் தனியாக பிரிந்து சென்று ஆரம்பித்த கட்சிதான் ஜனநாயக ஜனதா.

இந்த கட்சியின் தலைவரான துஷ்யந்த், பாஜக அரசுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுகிறது. இது குறித்து, முதல்வர் கட்டார் கூறுகையில், நான் ஏற்கனவே முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டேன். தற்போது ஜே.ஜே.பி. கட்சியின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைக்க கவர்னரிடம் உரிமை கோரினேன். அவர் அதை ஏற்று பதவியேற்க அழைப்பு விடுத்துள்ளார். அக்.27ம் தேதி மதியம் 2.15 மணிக்கு பதவியேற்பு விழா, ராஜ்பவனில் நடைபெறும். துணை முதல்வராக துஷ்யந்த் பொறுப்பேற்பார் என்றார்.

You'r reading அரியானாவில் கட்டார் மீண்டும் முதல்வராகிறார்.. சவுதாலா பேரன் துணை முதல்வர்.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை