பிராந்திய விரிவான பொருளாதார ஒப்பந்தத்தில்(ஆர்.சி.இ.பி) இந்தியா கையெழுத்திடாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஆசியான் மாநாடு நடைபெற்றது. இதில், 10 ஆசிய நாடுகள் மற்றும் இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, ஜப்பான், நியூசிலாந்து, தென்கொரியா ஆகிய 6 நாடுகளுமாக 16 நாடுகள் பங்கேற்றன. 16 நாடுகளும் இந்த மிகப் பெரிய பிராந்தியத்தில் தடையற்ற வர்த்தகம் செய்வதற்கான ஒப்பந்தம்தான் ஆர்.சி.இ.பி. என்பது. இதில் கையெழுத்திடும் நாடுகள் தங்களுக்குள் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் தடையற்ற வர்த்தகம் மேற்கொள்ளலாம்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த 2 நாள் மாநாட்டில் பங்கேற்றார். நேற்று அவர் பேசும் போது, இந்த ஒப்பந்தத்தின் தற்போதைய வடிவம், இதன் உண்மையான நோக்கத்தை பிரதிபலிப்பதாக இல்லை. ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்ட கொள்கைகளின்படி அமையவில்லை. இந்தியாவுக்குள்ள வர்த்தகப் பற்றாக்குறை பிரச்னைகளுக்கு இதில் தீர்வு இல்லை. எனவே, இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடாது என்று அறிவித்தார்.
ஆர்.சி.இ.பி. ஒப்பந்தத்தில் கையெழுத்திடக் கூடாது என்று இந்திய வர்த்தக அமைப்புகள் ஏற்கனவே மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தன. அதன்படி, ஒப்பந்தத்தை இந்தியா ஏற்கவில்லை என்று பிரதமர் அறிவித்துள்ளார்.
ஆர்.சி.இ.பி. ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டால், சீனாவின் மலிவு விலை பொருட்கள் தாராளமாக இந்தியாவுக்குள் இறக்குமதியாகும். இதனால், ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள சிறுகுறு நடுத்தரத் தொழில்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்படும். அதற்கு சீனப்பட்டாசுகளையே உதாரணமாக கூறலாம். அந்த பட்டாசுகளால் சிவகாசி பட்டாசுத் தொழிலே கடுமையாக பாதிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
ஒரு நாட்டில் இருந்து இந்தியாவுக்குள் எவ்வளவு இறக்குமதி செய்யப்படுகிறதோ, அதே தொகைக்கு இந்தியாவில் இருந்து அந்த நாட்டுக்கு ஏற்றுமதியாக வேண்டும். அதுதான் நியாயமான வர்த்தகம். ஆனால், ஏற்றுமதி எவ்வளவு குறைவாக இருக்கிறதோ அதையே வர்த்தகப் பற்றாக்குறை என்கிறோம். சீனாவுடன் இப்போதே இந்தியாவுக்கு 50 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகப் பற்றாக்குறை உள்ளது குறிப்பிடத்தக்கது.