எடியூரப்பா எனக்கு ஆயிரம் கோடி தந்தார்.. எம்.எல்.ஏ. அதிர்ச்சி தகவல்...

Karnataka disqualified MLA claims Yediyurappa gave him Rs 1,000 crore

by எஸ். எம். கணபதி, Nov 6, 2019, 12:44 PM IST

கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சிக் கவிழ்ப்புக்கு காரணமான எம்.எல்.ஏ.க்களில் ஒருவர், தனக்கு எடியூரப்பா ஆயிரம் கோடி ரூபாய் தந்ததாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார்.

கர்நாடகாவில் கடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக வென்ற போதும் அதற்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. அதனால், மதசார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமிக்கு முதல்வர் பதவி அளித்து, அக்கட்சியுடன் கூட்டணி ஆட்சியை காங்கிரஸ் அமைத்தது. ஆனால், குமாரசாமிக்கு எதிரியாக விளங்கிய காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு மந்திரி பதவி தரப்படவில்லை. அவரும் முதல்வர் பதவியில் இருந்து விட்டதால், மந்திரி பதவியேற்க விரும்பவில்லை. அதனால், மறைமுகமாக அந்த கூட்டணி அரசுக்கு தொல்லை ெகாடுத்து வந்தார்.

இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் வரை அதிருப்தி எம்.எல்.ஏ.க்களாக உருவெடுத்தனர். அவர்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். ஆனால், அப்போதைய சபாநாயகர் அதை ஏற்காமல் அவர்களை தகுதிநீக்கம் செய்தார். எனினும், குமாரசாமி ஆட்சி கவிழ்ந்து, எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது. தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தற்போது பாஜக பக்கம் சேர்ந்திருக்கிறார்கள். அவர்கள் தகுதிநீக்கத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளனர்.

தகுதிநீக்கம் ரத்து செய்யப்பட்டால், பாஜக சார்பில் இடைத்தேர்தலில் சீட் கேட்டிருந்தனர்.
இதற்கிடையே, எடியூரப்பா பேசிய ஒரு ஆடியோவை காங்கிரஸ் வெளியிட்டது. அதில் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்காக தியாகம் செய்திருக்கிறார்கள். அவர்களை கட்சி மேலிடம் கைவிடாது என்று அவர் பேசியிருந்தார். இது கர்நாடக அரசியலில் புயலை கிளப்பியது. இதையடுத்து, தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கும், பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இ்ல்லை என்று எடியூரப்பா ஒரே போடாக போட்டார்.

இந்த நிலையில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான நாராயண கவுடா திடீரென ஒரு குண்டை தூக்கிப் போட்டிருக்கிறார். அவர் கூறுகையில், குமாரசாமி ஆட்சி கவிழ்வதற்கு முன்பாக ஒரு நாள் அதிகாலை 5 மணிக்கு ஒருவர் என்னை எடியூரப்பாவிடம் அழைத்து சென்றார். அப்போது எடியூரப்பா வீட்டில் பூஜையில் இருந்தார். பூஜையை முடித்து விட்டு வந்த அவர், தான் மீண்டும் முதல்வராவதற்கு உதவ வேண்டுமென்று என்னிடம் கேட்டார்.

நான் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து, குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தால், அவர் முதல்வராகி விட முடியும் என்றார். நானும் எனது கிருஷ்ணராஜபேட்டை தொகுதியின் வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ.700 கோடி தருமாறு கேட்டேன். அதற்கு அவர் ரூ.300 கோடி சேர்த்து ரூ.1000 கோடி தருவதாக கூறினார். அதே போல், பணமும் தந்தார். அந்த பணத்தை தொகுதி வளர்ச்சிக்கு பயன்படுத்தினேன். தொகுதி வளர்ச்சிக்கு பணம் கொடுத்ததற்காக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தது தவறா? என்று கேட்டார்.

தற்போது கர்நாடக அரசியல் களத்தில் எடியூரப்பாவுக்கு எதிராக காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளன. இதனால், விரைவில் நடைபெறவுள்ள 15 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவுக்கு சறுக்கல் ஏற்படலாம். எனவே, எடியூரப்பா ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

You'r reading எடியூரப்பா எனக்கு ஆயிரம் கோடி தந்தார்.. எம்.எல்.ஏ. அதிர்ச்சி தகவல்... Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை