சர்ச்சை ஓய்ந்தபாடில்லை.. திருவள்ளுவர் படங்களை விநியோகிக்க பாஜக முடிவு..

by எஸ். எம். கணபதி, Nov 6, 2019, 11:14 AM IST
Share Tweet Whatsapp

திருவள்ளுவர் இந்துவா அல்லது மதங்களுக்கு அப்பாற்பட்டவரா என்ற சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. வரும் 9, 10ம் தேதிகளில் திருவள்ளுவர் படங்களை வைத்து வணங்கவும், மக்களுக்கு விநியோகம் செய்யவும் பாஜக முடிவு செய்திருக்கிறது.

தாய்லாந்து நாட்டிற்கு பிரதமர் மோடி சென்ற போது, அந்நாட்டு மொழியில் திருக்குறளை வெளியிட்டார். இந்த செய்தியை தமிழக பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு கூடவே, திருவள்ளுவருக்கு காவி உடையணிந்து நெற்றியில் பட்டை போட்ட படத்தையும் வெளியிட்டது. இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கம்யூனிஸ்ட், திராவிட இயக்கத் தலைவர்களும். சில தமிழ் ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். திருவள்ளுவர் எந்த மதத்திற்கும் அப்பாற்பட்டவர் என்றும் அவரை இந்து என்று சித்தரிப்பது தவறு என்றும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால், திருவள்ளுவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்று பாஜகவினர் தொடர்ந்து சர்ச்சையை கிளப்பி வருகின்றனர்.

இந்நிலையில், பாஜக தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு மாநில தலைவர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் வெளியிட்ட அறிக்கை வருமாறு:

தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் அனைவரும் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (9, 10ம் தேதி ) தங்களது இல்லங்கள், அலுவலகங்கள் மற்றும் உங்களுக்கு ஏற்றார்போல உள்ள பொது இடங்களில் திருவள்ளுவர் படங்களை திறந்து த்து மலர் தூவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு திருவள்ளுவர் படத்தை விநியோகிக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

இந்நிகழ்ச்சியை #Thiruvalluvar என்ற ஹோஸ்டேக் (Hashtag ) மூலம் டுவிட்டர்(Twitter) மற்றும் முகநூலில் (Facebook) பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வரும் 2020 புத்தாண்டு நாட்காட்டிகளில் திருவள்ளுவர்' படம் இடம்பெறுமாறு அச்சிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு நிர்மல்குமார் கூறியிருக்கிறார்.

தற்போது மற்றவர்கள் திருவள்ளுவர் விஷயத்தை விட்டுவிட்டாலும் பாஜக விடுவதாக தெரியவில்லை. திருவள்ளுவர் அரசியல் கொஞ்ச நாளைக்கு தொடர வேண்டுமென்றும், அதன் மூலம் இந்துக்களின் உணர்வுகளை தூண்டலாம் என்றும் அக்கட்சி முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.


Leave a reply