பாஜகவுடன் த.மா.கா இணையப் போகிறதா? பிரதமருடன் வாசன் சந்திப்பு..

G.K.Vasan meet P.M. Modi at delhi today

by எஸ். எம். கணபதி, Nov 6, 2019, 10:52 AM IST

பிரதமர் நரேந்திர மோடியை த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இன்று(நவ.6) சந்தித்து பேசுகிறார். இதனால், பாஜகவுடன் த.மா.கா. இணையப் போவதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் சமீபத்தில் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் பெற்றதாக அமைந்தது. இந்த நிகழ்வுக்காக சென்னை வந்திருந்த பிரதமர் மோடியை வரவேற்கச் சென்றவர்களுள் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனும் ஒருவர். அப்போது, பிரதமர் மோடி மற்றவர்களை விட வாசனிடம் அதிக கவனம் செலுத்தி பேசினார். ஏன் தன்னை சந்திக்க ஒரு முறை கூட வரவே இல்லை? என்று கேட்டார். அதற்கு வாசன், நிச்சயமாக வருகிறேன் என்று பதிலளித்தார்.

அதைத் தொடர்ந்து, பிரதமரின் அப்பாயின்ட்மென்ட் கேட்டு அவரது அலுவலகத்தில் வாசன் தகவல் கொடுத்தார். அதன்படி, இன்று காலையில் அவருக்கு பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியை வாசன் சந்தித்து பேசும் போது, தமிழக அரசியல் சூழல் குறித்து அவரிடம் பிரதமர் விவாதிப்பார். அப்போது வாசனை அவர் பாஜகவுக்கு அழைப்பார் என்று கூறப்படுகிறது. வாசனும் தனிக்கட்சி நடத்துவதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு பாஜகவுடன் த.மா.கா.வை இணைக்க வாய்ப்புள்ளது. மேலும், அதன் மூலம் தனக்கு மத்தியில் ஒரு பதவியையோ, மாநில தலைவர் பதவியையோ பெற முடியும். பாஜகவும் காங்கிரஸ் மீண்டும் பலமடைய விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது. அதனால், காங்கிரஸில் இருந்து பிரிந்தவர்களை இழுப்பதில் தீவிரமாக உள்ளது. எனவே, த.மா.கா.வை கண்டிப்பாக இழுத்து விடுவார்கள் என்று தமிழக அரசியலில் பரப்பாக பேசப்படுகிறது.

இது குறித்து த.மா.கா. தலைவர் ஒருவரிடம் பேசினோம். அவர் கூறுகையில், இது மரியாதைநிமித்தமான சந்திப்பு தான். கூட்டணி கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்திப்பார். அதே சமயம், பாஜகவுடன் த.மா.கா.வை இணைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவுதான். ஒரு வேளை பாஜகவில் வாசனுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டால் எதிர்காலத்தில் அது நடக்கலாம். அதே சமயம் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும்.

மூப்பனார் இருந்த போது அவர் இதே போல் த.மா.கா. கட்சி ஆரம்பித்தாலும் கடைசி வரை காங்கிரஸ்காரராகவே இருந்தார். 1999ம் ஆண்டில் வாஜ்பாய் அரசுக்கு எதிராக ஜெயலலிதா திரும்பிய போது, த.மா.கா.வில் 3 எம்.பி.க்கள் வைத்திருந்த மூப்பனாரிடம் பாஜக தலைவர்கள் ஆதரவு கேட்டனர். குறிப்பாக, வெங்கய்ய நாயுடு, மூப்பனாரை வளைக்க தீவிரமாக முயன்றார். ஆனால், வாஜ்பாய் மீது தான் மரியாதை வைத்திருந்தாலும் பாஜகவை ஒரு போதும் ஆதரிக்க முடியாது என்று மூப்பனார் மறுத்து விட்டார். அது பழைய வரலாறு என்று தெரிவித்தார்.

You'r reading பாஜகவுடன் த.மா.கா இணையப் போகிறதா? பிரதமருடன் வாசன் சந்திப்பு.. Originally posted on The Subeditor Tamil

More Delhi News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை