மகாராஷ்டிராவில் ஏற்கனவே இருந்த சட்டசபையின் பதவிக்காலம் நாளையுடன்(நவ.9) முடிவடைகிறது. சிவசேனாவுடன் ஏற்பட்ட மோதலால், புதிய அரசு அமைக்க பாஜக உரிமை கோரவில்லை.
இந்நிலையில், கவர்னரின் முடிவு என்னவென்று அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
மகாராஷ்டிராவில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால், பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும்தான் வெற்றி பெற்றுள்ளன. எனவே, கூட்டணி ஆட்சிதான் அமைக்க முடியும்.
தேர்தலுக்கு முன்பு தொகுதி பங்கீட்டின் போது, சிவசேனா 50:50 என்ற விகிதத்தில் சீட் கேட்டது. இதற்கு பாஜக ஒப்புக் கொள்ளவில்லை. அதன்பிறகு, தங்களுக்கு இரண்டரை ஆண்டு காலம் முதல்வர் பதவி தரப்பட வேண்டுமென்றும், அமைச்சரவையில் சரிபாதி தர வேண்டுமென்றும் சிவசேனா கேட்டிருக்கிறது. இதற்கு பாஜக ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. அதனால்தான், சிவசேனாவுக்கு 122 இடங்களை மட்டும் அளித்து விட்டு, பாஜக 150 இடங்களுக்கு மேல் போட்டியிட்டது.
தற்போது, சிவசேனா கட்சி, முதல்வர் பதவியை பிடிவாதமாக கேட்டு வருகிறது. பாஜகவோ தனிப்பெரும் கட்சியாக இருப்பதால், முதல்வர் பதவியை விட்டுத் தர முடியாது என்று மறுத்து வருகிறது. இதனால், தேர்தல் முடிவு வெளியாகி 15 நாட்களாகியும் இது வரை மகாராஷ்டிராவில் புதிய ஆட்சி அமையவில்லை.
இந்நிலையில், கடந்த சட்டசபையின் பதவிக்காலம் நாளையுடன்(நவ.9) முடிவடைகிறது. இதனால், முதல்வர் பட்நாவிஸ் நாளைக்குள் ராஜினாமா செய்ய வேண்டும். இதற்கிடையே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா ஆட்சியமைக்க நாங்கள் ஆதரவு தர மாட்டோம், எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்று கூறிவிட்டார். இதனால் சிவசேனா பணிந்து விடும் என்று பாஜக நம்பியது.
ஆனால், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று(நவ.7), பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை நடத்தினார். அதில், பாஜக தேர்தலுக்கு முன்பு சொன்ன வாக்குறுதியை நிறைவேற்ற மறுப்பதாக பேசினார். இதன்பின், எம்.எல்.ஏக்கள் யாரும் எந்த சூழ்நிலையிலும் விலை போகக் கூடாது என்று எச்சரித்தார். இதைத் தொடர்ந்து, சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் உத்தவ் தாக்கரே வீட்டுக்கு அருகே உள்ள ரங்கசாரதா ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சிவசேனாவை சமரசம் செய்ய முடியாமல் போனதால், பாஜகவும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து போயுள்ளது. மைனாரிட்டி ஆட்சி அமைத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற முடியாவிட்டால் அசிங்கமாகி விடும் என்று பாஜக தலைவர்கள் பயப்படுகின்றனர்.
இந்த சூழ்நிலையில், கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி, பாஜக ஆட்சியமைக்க உரிமை கோராவிட்டால் என்ன செய்ய வேண்டுமென்று சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டு வருகிறார். அவரது முடிவு என்னவாக இருக்கும் என்று அம்மாநில அரசியலில் தற்போது பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.