முதல்வர் பதவி தருவதாக எழுதி கொடுத்தால் ஓ.கே. பாஜகவுக்கு சிவசேனா கெடு..

by எஸ். எம். கணபதி, Nov 8, 2019, 13:45 PM IST
Share Tweet Whatsapp

ஐந்தாண்டு ஆட்சியில் இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வர் பதவியை விட்டுத் தருவதாக உறுதி அளித்தால், பாஜகவுடன் சேர்ந்து ஆட்சியமைப்பதாக சிவசேனா கூறியுள்ளது.

மகாராஷ்டிராவில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால், பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

தேர்தலுக்கு முன்பே முதல்வர் பதவியை இரண்டரை ஆண்டுகளுக்கு விட்டு தர பாஜக ஒப்புக் கொண்டதாக கூறி, அந்த பதவியை கேட்டு சிவசேனா பிடிவாதம் பிடித்து வருகிறது. ஆனால், தனிப்பெரும் கட்சியான பாஜக அதற்கு மறுப்பு தெரிவித்ததால், 15 நாட்களாகியும் ஆட்சியமைக்கப்படவில்லை. முதலமைச்சர் பட்நாவிஸ் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது.

இந்நிலையில், சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், நாளையுடன் பழைய ஆட்சி முடிவடைவதால், பட்நாவிஸ் ராஜினாமா செய்ய வேண்டும். காபந்து ஆட்சியாக பட்நாவிஸ் தொடர முயற்சி செய்தாலோ, அதை கவர்னர் அனுமதித்தாலோ அது அரசியல் சட்டத்திற்கு முரணாகும். அதிகாரத்தை கையில் வைத்து கொள்ள யார் முயன்றாலும் அது தவறு.

மத்திய அமைச்சர் நிதின்கட்கரி, மும்பையைச் சேர்ந்தவர். அவர் எப்போது வேண்டுமானாலும் வரலாம். உத்தவ் தாக்கரேயை சந்திக்கலாம். ஆனால், இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வர் பதவியை சிவசேனாவுக்கு விட்டு தருவதாக எழுதி கொடுத்தால் மட்டுமே நாங்கள் பாஜகவுடன் சேர்ந்து ஆட்சியமைப்போம். அதில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.


Leave a reply