மீனாட்சியை தரிசிப்போருக்கு லட்டு வழங்கும் திட்டம்.. முதல்வர் தொடங்கி வைத்தார்

by எஸ். எம். கணபதி, Nov 8, 2019, 13:38 PM IST
Share Tweet Whatsapp

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அம்மனை தரிசிக்கும் பக்தர்களுக்கு இலவச லட்டு பிரசாதம் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. தமிழோடு இணைந்த பல வரலாறுகளை கொண்ட கோயில். இங்கு தினமும் வடமாநிலத்தவர் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து அம்மனை தரிசித்து அருள் பெறுகிறார்கள்.

இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்குவது போல் இலவச லட்டு பிரசாதம் வழங்க அறநிலையத் துறை முடிவு செய்தது. இதன்படி,. மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த மாதம் 27ம் தேதி தீபாவளியன்று முதல் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், திடீரென லட்டு விநியோகிப்பது ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று முதல் லட்டு பிரசாதம் வழங்கும் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இத்திட்டத்தை தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே காணொலி காட்சி மூலமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மதுரையைச் சேர்ந்த அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயகுமார் ஆகியோரும், அறநிலையத் துறை அதிகாரிகளும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இத்திட்டத்தின்படி, கோயிலில் மீனாட்சி அம்மனை தரிசித்து விட்டு, மூலவரான சொக்கநாதரை தரிசிக்கச் செல்லும் பிரகாரத்தில் அமைந்துள்ள முக்குருணி விநாயகர் சந்நதி அருகே பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
காலையில் கோயில் நடை திறந்தது முதல், இரவு நடை சாத்தும் வரை பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் இலவசமாக வழங்கப்படும். தினமும் சுமார் 20 ஆயிரம் பக்தர்களுக்கு இந்த பிரசாதம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a reply