மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த முனியசாமி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் அம்பேத்கர் நகர் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு விழா தை முதல்நாள் அவனியாபுரத்தில் நடைபெறும். தற்போது ஜல்லிக்கட்டு விழா அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. ஆனால் அனைத்து சமூகத்தினரையும் ஒருங்கிணைக்கும் வகையில் விழா குழு அமைக்கப்படவில்லை. அனைத்து சமூகத்தினரையும் ஒருங்கிணைத்து ஜல்லிக்கட்டு விழா குழுவை அமைக்க வேண்டும்.
கடந்த ஆண்டும் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே அனைவரையும் ஒருங்கிணைத்து விழா குழு அமைக்கப்பட்டது. இந்த ஆண்டு அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழா நடைபெற உள்ளது. ஆனால் ஒருசில அங்கீகரிக்கப்படாத நபர்கள் மட்டும் விழா குழு அங்கத்தினராக உள்ளனர். ஜல்லிக்கட்டு விழா குழுவில் அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கும் வகையில் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. எங்கள் பகுதியில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சுமார் ஆயிரம் குடும்பங்கள் இருந்தும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு போதிய வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஆகவே அனைத்து சமூகத்தினருக்கும் வாய்ப்பு அளிக்கும் வகையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழா குழுவை அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது