அமித்ஷா vs சோனியா மகாராஷ்டிர அரசியல்.. யாருக்கு வெற்றி?

Congress, NCP go slow as ShivSena Waits For Support

by எஸ். எம். கணபதி, Nov 12, 2019, 12:10 PM IST

மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது பற்றி காங்கிரஸ் இன்னும் மவுனம் காப்பதால் இழுபறி நீடிக்கிறது. அம்மாநில அரசியலில் அமித்ஷா ஒரு கணக்கும், சோனியாகாந்தி ஒரு கணக்கும் போடுகின்றனர்.

மகாராஷ்டிராவில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றது. பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. தேர்தலுக்கு முன்பு தொகுதி உடன்பாட்டின் போது, சிவசேனாவுக்கு இரண்டரை ஆண்டு காலம் முதல்வர் பதவியை விட்டுத் தருவதாக பாஜக ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், வெளிப்படையாக அப்படி அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், தேர்தலுக்கு முன்பு பேசியபடி, தங்கள் கட்சிக்கு இரண்டரை ஆண்டு காலம் முதல்வர் பதவி தரப்பட வேண்டுமென்று சிவசேனா பிடிவாதமாக கேட்டது. பாஜகவோ தனிப்பெரும் கட்சியாக இருப்பதால், முதல்வர் பதவியை விட்டுத் தர முடியாது என்று மறுத்து விட்டது. மேலும், அப்படியொரு ஒப்பந்தமே போடவில்லை, சிவசேனா பொய் சொல்கிறது என்று பாஜக கூறி விட்டது.

இந்த இழுபறியில் முந்தைய சட்டசபையின் பதவிக்காலம் முடிந்தது. இதற்கிடையே, பாஜகவால் ஆட்சியமைக்காவிட்டால் சிவசேனா ஆட்சியமைக்கத் தயாராக உள்ளதாக அக்கட்சி அறிவித்தது. மேலும், தேசியவாத காங்கிரஸ்(என்.சி.பி.) தலைவர் சரத்பவாரை சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய்ராவத் சந்தித்து பேசினார்.

இதன் தொடர்ச்சியாக, சரத்பவார் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை சந்தித்து விட்டு திரும்பினார். அப்போது சிவசேனாவுக்கு என்.சி.பி-காங்கிரஸ் அணி ஆதரவு அளிக்குமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது அவர், எங்களை மக்கள் எதிர்க்கட்சிகளாக தேர்வு செய்திருக்கிறார்கள். அமித்ஷா கெட்டிக்காரர். அவர் சிவசேனாவை சிறப்பாக கையாண்டு விடுவார் என்று சிரித்து கொண்டே கூறினார்.

இதனால், சிவசேனாவுக்கு என்.சி.பி-காங்கிரஸ் ஆதரவு கிடைக்காது என்று பாஜக நினைத்தது. இப்போது பாஜக ஆட்சிப் பொறுப்பை ஏற்றால், வேறு வழியில்லாமல் சிவசேனா வழிக்கு வந்து விடும் என்று எதிர்பார்த்தது. இதைத் தொடர்ந்து, பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவரான முன்னாள் முதல்வர் பட்நாவிஸை பதவியேற்க வருமாறு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார்.

ஆனால், அப்போதும் சிவசேனா பணியவில்லை. பாஜகவால் ஆட்சியமைக்க முடியாவிட்டால் சிவசேனா ஆட்சியமைக்கத் தயார். எங்களை கவர்னர் அழைக்க வேண்டும்என்று சிவசேனாவின் சஞ்சய் ராவத் பேட்டி அளித்ததுடன் சரத்பவாரை மீண்டும் சந்தித்தார். இதன்பின், பட்நாவிஸ் கவர்னரை சந்தித்து பாஜகவுக்கு மெஜாரிட்டி இல்லாததால், ஆட்சியமைக்க விரும்பவில்லை என்று தெரிவித்து விட்டார். அதுவரை அமித்ஷாவின் அரசியல் ஓடிக் கொண்டிருந்தது.

இதற்குப் பிறகு, சோனியாவின் அரசியல் ஆரம்பமானது. சிவசேனாவுக்கு ஆதரவளிக்க என்.சி.பி.யும், காங்கிரசும் சேர்ந்து ஒரு நிபந்தனை விதித்தன. அதாவது, மத்திய அரசில் இருந்து சிவசேனா விலகி, பாஜக கூட்டணியை முறிக்க வேண்டும். அப்போதுதான், சிவசேனாவிடம் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றன. வேறு வழியின்றி சிவசேனாவும் தனது ஒரே மத்திய அமைச்சரான அரவிந்த் சாவந்த்தை ராஜினாமா செய்ய வைத்தது.
இதற்கு பின், என்சிபி-காங்கிரஸ் கட்சிகளிடம் இருந்து ஆதரவு கடிதம் வந்து விடும் என்று சிவசேனா எதிர்பார்த்தது.

ஆனால், சோனியா வேெறாரு அரசியல் செய்தார். அதாவது, காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவரான சஞ்சய் நிருபம், சிவசேனாவுடன் கொள்கை ரீதியாக காங்கிரஸ் ஒத்து போக முடியாது. மக்களை சந்திக்க முடியாதுஎன்று எதிர்ப்பு குரலை எழுப்பினார். கேரளாவில் இருந்தும் காங்கிரசார், சிவசேனாவுக்கு எதிராக குரல் எழுப்பப்பட்டது.

இப்படி செய்ய வைத்த சோனியாகாந்தி, இதையே காரணமாக சொல்லி கட்சியினரிடம் பேசி விட்டு சொல்ல மூன்று நாள் அவகாசம் வேண்டுமென்று கூறி விட்டார். அதாவது சோனியாவின் கணக்கு என்னவென்றால், சிவசேனா ஆட்சியமைக்காமல் போய் மகாராஷ்டிராவில் அரசியல் குழப்பம் நீடிக்கும் என்பதுதான். அப்படி குழப்பம் நீடித்தால் இறுதியில் மீண்டும் பொதுத் தேர்தல் வந்து விடும். அப்போது, பாஜகவும், சிவசேனாவும் எலியும் பூனையுமாக சண்டை போட்டு தனித்தனியே போட்டியிடும். என்.சி.பி-காங்கிரஸ் வலுவான அணியாக போட்டியிட்டால் ஆட்சியை பிடித்து விடலாம் என்பதுதான்.

இப்போது பந்து அமித்ஷாவின் எல்லையில் இருக்கிறது. அவர் எப்படி விளையாடப் போகிறாரோ தெரியவில்லை. ஆனால், சிவசேனாவுடன் உறவை முறித்த பின்பு தேர்தல் நடத்துவதை அவர் விரும்ப மாட்டார். அதற்கு பதிலாக ஆறு மாதத்திற்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தி, அதற்குள் சாம, பேத, தான, தண்ட வழிகளை பயன்படுத்தி சிவசேனாவை வழிக்கு கொண்டு வருவதுதான் அவரது யுக்தியாக இருக்கலாம்.

You'r reading அமித்ஷா vs சோனியா மகாராஷ்டிர அரசியல்.. யாருக்கு வெற்றி? Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை