ஜேப்பியார் கல்வி குழுமத்தின் நிறுவனங்கள் மற்றும் அதன் தொடர்பான இடங்களில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.350 வருவாய் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், 5 கோடி ரொக்கம், ரூ.3கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஜேப்பியார் அறக்கட்டளை சென்னை புறநகர்களில் பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது. மேலும், குடிநீர், பால், மீன்பிடி துறைமுகம், இரும்பு என்று பல தொழில் நிறுவனங்களையும் நடத்தி வருகிறது. ஜேப்பியார் பொறியியல் கல்லூரி, சத்தியபாமா கல்லூரி, பனிமலர் பொறியியல் கல்லூரி, பனிமலர் பாலிடெக்னிக் மற்றும் பல்வேறு தொடர்பு நிறுவனங்கள் என 32 இடங்களில், கடந்த 7ம் தேதி முதல் 4 நாட்கள் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் ரூ5 கோடி ரொக்கப் பணம், ரூ.3 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், வருமான வரித் துறைக்கு கணக்கு காட்டாமல் ரூ.350 கோடி வருவாயை மறைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு வரி மற்றும் அபராதத் தொகைகள் விதிக்கப்படவுள்ளது.
வருமானவரித் துறையினர் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், ஒரு கல்லூரியில் மாணவர் சேர்க்கையின் போது ஒவ்வொரு மாணவரிடமும் அட்வான்சாக பெறப்பட்ட கட்டணம் மட்டுமே கல்வி நிறுவனக் கணக்கில் காட்டப்பட்டிருக்கிறது. மீதித் தொைககள் வேறு நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. பல போலியான செலவு கணக்குகள் காட்டப்பட்டு, வருவாய் மறைக்கப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டு ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.