தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு தடை விதிக்கக் கோரி, தமிழக அரசு தொடர்ந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
கர்நாடகா மாநிலம், சென்னகேசவ மலையில் தென்பெண்ணை ஆறு உற்பத்தியாகி, தமிழகத்திற்குள் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் வழியாக 432 கி.மீ தூரம் ஓடுகிறது. இறுதியாக, கடலூர் அருகே கடலில் கலக்கிறது.
இந்நிலையில், தமிழக எல்லையை ஒட்டி, கர்நாடக அரசு அந்த ஆற்றின் கிளை நதியான மார்க்கண்டேய நதியில் புதிய அணை கட்ட திட்டமிட்டு, அதற்கான ஆய்வு பணிகளை தொடங்கியது. இதையடுத்து, கர்நாடகா அணை கட்டுவதற்கு தடை விதிக்கக் கோரி, தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
ஏற்கனவே, கடந்த 2012-2013ம் ஆண்டில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிப்பதை கூறி, அதற்கு தடை விதிக்குமாறு பிரதமருக்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் சுப்ரீம் ேகார்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
தென்பெண்ணை ஆற்றில் தங்களின் ஒப்புதல் இல்லாமல் எவ்வித ஆய்வு பணிகளும் மேற்கொள்ளக் கூடாது என்றும், தமிழகத்திலும் அந்த ஆறு ஓடுவதால், தமிழக அரசுக்கும் உரிமை உள்ளது என்பதால், தமிழகத்தின் அனுமதி பெறாமல் எந்த பணியும் மேற்கொள்ள முடியாது என்று தமிழக அரசின் மனுவில் கூறப்பட்டது.
இந்நிலையில், தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்துள்ளது. இதனால், தென்பெண்ணை ஆற்றில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு பணிகளை கர்நாடக அரசு மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.