15 தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள்.. பாஜகவில் இணைந்தனர்.. இடைத்தேர்தலில் போட்டி?

by எஸ். எம். கணபதி, Nov 14, 2019, 12:47 PM IST

கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சியை கவிழ்க்க உதவியதால், தகுதிநீக்கம் செய்யப்பட்ட 15 எம்.எல்.ஏ.க்களும் இன்று எடியூரப்பா முன்னிலையில் பாஜகவில் சேர்ந்தனர். அவர்களுக்கு இடைத்தேர்தலில் போட்டியிட சீட் தரப்படும் என்று தெரிகிறது.

கர்நாடகாவில் கடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக வென்ற போதும் அதற்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதையடுத்து, 2வது இடம் பெற்ற காங்கிரஸ் கட்சி, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி ஆட்சி அமைத்தது. மேலும், ம.ஜ.த. தலைவர் குமாரசாமிக்கு முதல்வர் பதவி அளித்தது. ஆனால், குமாரசாமிக்கு எதிரியாக செயல்படும் காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு அது பிடிக்கவில்லை. அதனால், மறைமுகமாக அந்த கூட்டணி அரசுக்கு தொல்லை கொடுத்து வந்தார்.

இதைத் தொடர்ந்து, காங்கிரஸ், ம.ஜ.த. கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் வரை அதிருப்தி எம்.எல்.ஏ.க்களாக உருவெடுத்தனர். அவர்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். ஆனால், அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார், அந்த ராஜினாமாவை ஏற்காமல், அவர்களை எம்.எல்.ஏ.பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்தார்.

எனினும், மெஜாரிட்டியை இழந்த குமாரசாமி ஆட்சி கவிழ்ந்து, எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது. தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள், பாஜகவுக்கு ஆதரவாக திரும்பினார்கள். இதற்கிடையே, அவர்கள் எடியூரப்பா தூண்டுதலில்தான் குமாரசாமி ஆட்சியை கவிழ்த்தார்கள் என்று நிரூபிப்பது போல் ஒரு ஆடியோ வெளியானது. அதில் குமாரசாமி ஆட்சியை கவிழ்க்க அதிருப்தி எம்.எல்.ஏக்களுடன் எடியூரப்பா பேரம் பேசியது வெளியானது.

இந்நிலையில், அந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தகுதிநீக்கத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் நேற்று பரபரப்பான தீர்ப்பு அளித்தது. நீதிபதிகள் என்.வி.ரமணா, சஞ்சீவ் கன்னா, கிருஷ்ண முராரி ஆகியோர் அளித்த தீர்ப்பில், இந்த 17 பேரையும் முந்தைய சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும். சபாநாயகரின் அதிகாரங்களில் நாங்கள் குறுக்கிட விரும்பவில்லை.

அதே சமயம், இந்த சட்டசபை பதவிக்காலம் முடியும் வரை தகுதிநீக்கம் என்பதை ஏற்கவில்லை. கர்நாடகாவில் நடந்த சம்பவங்கள், தற்போது நிலவும் சூழல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த 17 பேரும் இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதிக்கிறோம். அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கும், எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர் பதவி ஏற்பதற்கும் எந்த தடையுமில்லை என்று தீர்ப்பளித்துள்ளனர்.

இதன்மூலம், காங்கிரஸ் சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு சரியானதாக அறிவிக்கப்பட்டாலும், இடைத்தேர்தல்களில் தகுதிநீக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களை போட்டியிட அனுமதித்திருப்பது எடியூரப்பாவுக்கு வெற்றியாக தெரிகிறது.
இந்த சூழலில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட 15 பேர் இன்று பெங்களூருவில் முதலமைச்சர் எடியூரப்பாவை சந்தித்து பாஜகவில் தங்களை இணைத்து கொண்டனர். இவர்கள் 15 பேருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு பாஜகவில் எடியூரப்பா சீட் வாங்கித் தருவார் என்று நம்பிக்கையுடன் உள்ளனர். அனைவருக்கும் சீட் தர பாஜக மேலிடம் ஒப்புக் கொள்ளுமா என்பது விரைவில் தெரியும்.

தற்போது முதல்வர் எடியூரப்பா தலைமையிலான அரசுக்கு 106 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுதான் உள்ளது. அதே சமயம், காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளுக்கு மொத்தமாக 101 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். எனவே, இந்த 15 தொகுதி இடைத்தேர்தலில் குறைந்தது 6 தொகுதிகளிலாவது பாஜக வெற்றி பெற்றாக வேண்டும். பாஜக அதற்கு மேலும் வெற்றி பெற்றால் வலுவான ஆட்சியாக அமைந்து விடும்


Leave a reply