பிரான்ஸ் நாட்டில் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட மறு ஆய்வு மனுக்களை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.
மத்தியில் கடந்த 2014ல் பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் பிரான்சிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க புதிய ஒப்பந்தம் போடப்பட்டது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தை விட இந்த ஒப்பந்தத்தில் அதிக விலை கோரப்பட்டுள்ளதாகவும், இதில் பெரிய ஊழல் நடந்துள்ளதாகவும் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டின.
இது தொடர்பாக சிலர், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ரபேல் விலை விவரங்கள் உள்ளிட்ட ஆவணங்களுக்குள் செல்லாமல், ஒப்பந்தத்தில் எந்த விதிமுறைகளும் மீறப்படவில்லை. முறைகேடு நடைபெறவில்லை என 2018 டிசம்பர் 14ம் தேதி தீர்ப்பு அளித்தது.
இதற்கு பின்னர், ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தில் இருந்த சில ஆவணங்கள் இந்து நாளிதழில் வெளியாயின. இதையடுத்து, ரபேல் வழக்கின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்கள் விசாரணைக்கு உகந்ததல்ல என்று மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், அதை சுப்ரீம் கோர்ட் ஏற்கவில்லை.
இதையடுத்து, ரபேல் ஒப்பந்தம் தொடர்பான முந்தைய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய சுப்ரீம் கோர்ட் முடிவு செய்தது. இந்த வழக்கு விசாரிக்கப்பட்ட போது, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தில் இருந்து சில ஆவணங்கள் திருடப்பட்டுள்ளது. இந்த சில அரைகுறை ஆவணங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு எந்த முடிவும் எடுக்க முடியாது. தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கூடாது என மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கூறினார். மேலும், ஆவணங்களை வெளியிட்ட இந்து நாளிதழ் மீது அரசு ரகசிய காப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசுதரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, பிரசாந்த் பூஷண் ஆகியோர் ஒரு அபிடவிட் தாக்கல் செய்தனர். அதில், ரபேல் ஒப்பந்தம் தொடர்பான உண்மையான தகவல்களை மத்திய அரசு மறைத்துள்ளது. இதனால், தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ரபேல் ஒப்பந்தம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். அதனடிப்படையில் விசாரணை நடத்தவேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் இன்று தீர்ப்பளித்தனர். அதில் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் விதிமீறல் எதுவும் இல்லை என்ற டிசம்பர் 14ம் தேதி அளித்த தீர்ப்பை உறுதி செய்தனர். மறு ஆய்வு மனுக்களை தள்ளுபடி செய்தனர்.