சபரிமலை வழக்கின் தீர்ப்பில் குழப்பம்.. விளக்கம் கேட்கிறார் பினராயி

by எஸ். எம். கணபதி, Nov 15, 2019, 10:49 AM IST
Share Tweet Whatsapp

சபரிமலை வழக்கில் குழப்பம் உள்ளது என்றும், இது பற்றி விளக்கம் பெற வேண்டியுள்ளது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 வயது வரை உடைய பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. முந்தைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரோகின்டன் நரிமன், கன்வில்கர், சந்திரசூட், இந்து மல்கோத்ரா ஆகியோரும் அடங்கிய அந்த அமர்வு கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதியன்று சபரிமலை வழக்கில் தீர்ப்பு வழங்கியது.

அதில், பெண் நீதிபதி இந்து மல்கோத்ராவைத் தவிர மற்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், அனைத்து வயது பெண்களையும் சபரிமலை கோயிலில் அனுமதிக்கலாம் என்று தீர்ப்பளித்தனர்.

அதே சமயம், நீதிபதி இந்து மல்கோத்ரா தனது தீர்ப்பில், அடிப்படை உரிமை என்ற பெயரில் மதநம்பிக்கைகளில் குறுக்கீடு செய்ய அனுமதிக்க முடியாது என்று குறிப்பிட்டார். மெஜாரிட்டி தீர்ப்பு அடிப்படையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன்கோகய், நீதிபதிகள் நரிமன், கன்வில்கர், சந்திரசூட், இந்து மல்கோத்ரா ஆகியோர் விசாரித்தனர்.

இதைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், நீதிபதிகள் கன்வில்கர், இந்து மல்கோத்ரா ஆகியோர் தனியாகவும், ேராகின்டன் பாலி நரிமன், சந்திரசூட் ஆகியோர் தனியாகவும் வேறுபட்ட தீர்ப்புகளை அளித்தனர். தலைமை நீதிபதி தலைமையிலான மெஜாரிட்டி தீர்ப்பில், பொது வழிபாட்டு தலங்களில் பெண்களை அனுமதிப்பது என்பது இந்த கோயிலுடன் முடிந்து விடாது. இப்பிரச்னை மசூதிகளுக்குள் பெண்களை அனுமதிக்கும் விஷயத்தையும் உள்ளடக்கும் என்பதால், இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிடப்படுகிறது என்று தீர்ப்பளித்தனர்.

இது பற்றி, கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் குழப்பம் உள்ளது. மெஜாரிட்டி தீர்ப்பில், முந்தைய தீர்ப்புக்கு தடை எதுவும் விதிக்கப்படவில்லை. எனவே, தற்ேபாது பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டுமா என்று தெரிய வேண்டும். மற்ற 2 நீதிபதிகள் வெளியிட்ட தீர்ப்பில், மறு ஆய்வு மனுக்களை தள்ளுபடி செய்து, கோயிலில் பெண்களை அனுமதிக்க வேண்டுமென்ற நிலைப்பாடு எடுத்துள்ளனர். எனவே, அதை பின்பற்றுவதாக அமையுமா? இந்த குழப்பம் குறித்து தெளிவு பெற வேண்டியுள்ளது. எனவே, தீர்ப்பு குறித்து மேலும் விளக்கம் பெற வேண்டியுள்ளது. இது குறித்து சட்ட நிபுணர்களிடம் ஆலோசித்து அடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.


Leave a reply