கர்நாடக காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சிவக்குமாரின் ஜாமீனை ரத்து செய்யக் கோரிய அமலாக்கத் துறையினரின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. மேலும், அமலாக்கத் துறையின் செயல்பாட்டை கண்டித்தது.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் சிவக்குமார். முந்தைய முதல்வர் குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதாதளம்-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை காப்பாற்றுவதற்காக போராடியவர். ஆனாலும், 17 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து ஆட்சியை கவிழ்த்தனர். அதற்கு பிறகு எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது.
இதற்கு பின்னர், சிவக்குமாரை சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். அவர் 50 நாட்களாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு கடந்த மாதம் டெல்லி ஐகோர்ட் ஜாமீன் அளித்தது. இதை எதிர்த்து அமலாக்கத் துறையின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று(நவ.15) நீதிபதி ரோகிண்டன் நரிமன் தலைைமயிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை சார்பில் சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடினார். அப்போது நீதிபதி நரிமன் கூறுகையில், அமலாக்கத் துறை நடந்து கொள்ளும் விதம் சரியல்ல. குடிமகன்களை இப்படித்தான் நடத்துவதா? என்று கண்டனம் தெரிவித்தார்.
சரியான காரணம் இல்லாமல், அவர் தப்பி விடுவார் என்ற ரீதியில் ஜாமீனை ரத்து செய்யக் கோரியதற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர். மனுவை தள்ளுபடி செய்யக் கூடாது என்று வாதாடிய துஷார் மேத்தாவின் கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்து விட்டனர்.