மகாராஷ்டிராவில் அக்டோபரில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றது. பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. தேர்தலுக்கு முன்பு தொகுதி உடன்பாட்டின் போது, சிவசேனாவுக்கு இரண்டரை ஆண்டு முதல்வர் பதவியை விட்டுத் தருவதாக பாஜக ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.
ஆனால், தற்போது பாஜக தனிப்பெரும் கட்சியாக இருப்பதால், முதல்வர் பதவியை விட்டுத் தர முடியாது என்று மறுத்து விட்டது. மேலும், சிவசேனாவிடம் அப்படி ஒப்புக் கொள்ளவே இல்லை என்றும் அக்கட்சியினர் பொய் சொல்லுகிறார்கள் என்றும் பாஜக கூறியது. இதனால், இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி முறிந்தது. மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது.
இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து சிவசேனா ஆட்சியமைக்க முயன்று வருகிறது. இதற்காக மூன்று கட்சித் தலைவர்களும் பேசி வருகிறார்கள். இதற்கிடையே, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியதாவது:
தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் குறைந்த பட்ச செயல் திட்டம் பற்றி விவாதிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அது முடிந்து விடும். அடுத்த 25 ஆண்டுகளுக்கு சிவசேனா தலைமையில்தான் ஆட்சி நடைபெறும். சிவசேனா கடந்த 50 ஆண்டுகளாக மாநிலத்தின் வளர்ச்சிக்கு பணியாற்றி வருகிறது.
காங்கிரசுடன் கூட்டணி சேருவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. அந்த கட்சி இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற கட்சி. மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்கு பாடுபட்ட கட்சி. ஏற்கனவே, பிரதமர் வாஜ்பாய் எதிர் கொள்கையுடைய கட்சிகளுடன் இணைந்த குறைந்தபட்ச செயல்திட்டம் நிறைவேற்றி ஆட்சியமைக்கவில்லையா? சரத்பவார் ஜனசங்கத்துடன் இணைந்து ஆட்சி நடத்தவில்லையா? எனவே, ஆட்சியமைப்பதில் பிரச்னை இல்லை.
இவ்வாறு சஞ்சய் ராவத் கூறினார்.