தமிழக சட்டசபையை கூட்டி, நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை மீண்டும் நிறைவேற்ற வேண்டுமென்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், நீட் தேர்வு மூலமாகத் தேர்ச்சி பெற்று மருத்துவக் கல்வியில் சேர்ந்தவர்களில், தனியார் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற மாணவர்களே அதிகம் என்று தமிழக அரசே நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்ட பிறகும், நீட் தேர்வினை, தற்போதைய அரசு ஏன் திரும்பப் பெறக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு கேள்வி எழுப்பி, பத்து நாட்களுக்கு மேலான நிலையிலும், அ.தி.மு.க. அரசோ, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ எந்தக் கருத்தும் சொல்லாமல், மவுனம் காப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தி.மு.க. ஆட்சி இருந்த வரை, ஏழை எளிய நடுத்தர வகுப்பு மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வினை தமிழகத்திற்குள் நுழைய விடாமல் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்துத் தடுத்து நிறுத்தியவர் கலைஞர்.
ஆனால் ஆட்சிக்கு வந்த ஒரே வருடத்தில், தன் முதலமைச்சர் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்குடன், அவசர அவசரமாக நீட் தேர்வினை தமிழக மாணவர்கள் மீது திணித்து, பல தற்கொலைகளுக்கு வித்திட்டது அ.தி.மு.க. அரசு.
தமிழகத்தில் உள்ள 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 8 மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களில், நீட் பயிற்சி மையத்தில் சேராமல் படித்த மாணவர்கள் ஒருவர் கூட இல்லை. அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 3,200 மருத்துவ இடங்களில் 48 பேர் மட்டுமே நீட் பயிற்சி மையத்திற்குப் போகாமல் மருத்துக் கல்வியில் சேர்ந்தவர்கள்.
சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,650 சீட்டுகளில் 52 பேர் மட்டுமே நீட் பயிற்சி மையத்திற்குப் போகாமல் சேர்ந்துள்ளார்கள். இந்தத் தகவல்களை எல்லாம் அ.தி.மு.க. அரசே உயர்நீதிமன்ற வழக்கு விசாரணையில் தெரிவித்துள்ளது.
இதுபோல, சமூகநீதிக்கு ஆபத்து வரும், கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி எட்டாக்கனியாகி விடும் என்ற அடிப்படையில்தான், உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி மறைந்த அல்டாமஸ் கபீர் தலைமையிலான அமர்வு, நீட் தேர்வை ரத்து செய்து தீர்ப்பளித்தது.
மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும், எதிர்வாதமே இல்லாமல் ஒரு தலைப்பட்சமாக அந்தத் தீர்ப்பை தள்ளுபடி செய்ய வைத்து, நீட் தேர்வை வம்படியாக தமிழகத்தின் மீது திணித்தது.
அன்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சொன்ன அதே கருத்தை, இன்றைக்கு சென்னை உயர்நீதிமன்ற அமர்வின் நீதிபதிகள் எதிரொலித்திருப்பது, கிராமப்புற மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதில் நீதித்துறைக்கு உள்ள அக்கறையில் ஒரு சிறு அளவு கூட, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய - மாநில அரசுகளுக்கு இல்லை என்பதை நிரூபித்துள்ளது. சமூகநீதிக்கு உலை வைக்கும் இந்த நீட் தேர்வை தி.மு.க. தொடர்ந்து எதிர்த்து வருகிறது.
“நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும்” என்று சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டும், அந்த மசோதாக்களை உதாசீனப்படுத்தி திருப்பி அனுப்பியது மத்திய பா.ஜ.க. அரசு.
“திருப்பி அனுப்பி விட்டார்கள்” என்பதைக் கூடச் சொல்வதற்கு அஞ்சி, புதுப்புது வினோதமான சட்ட அர்த்தங்களைக் கூறி, அரசியல் சட்டம் புரிந்த வல்லுனர்களையே திணற வைத்தது அ.தி.மு.க. அரசு.
சட்டமன்றத்தில் இது குறித்த கேள்வியை பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் எழுப்பிய போது, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும், சட்டத்துறை அமைச்சரும், முதலமைச்சரும், “மசோதா திருப்பி அனுப்பப்பட்டதற்குக் காரணம் கேட்டிருக்கிறோம்” என்று விதண்டாவாதம் செய்தார்கள்.
ஆகவே, இதுவரை நீட் தேர்வில் அடித்த கூத்துக்கள் - குழப்பங்கள் - மத்திய பா.ஜ.க. அரசின் சமூகநீதி விரோதப் போக்கிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மனப்பூர்வமான ஒத்துழைப்பு நல்கி - தமிழக மாணவர்களுக்கு இழைத்த மாபெரும் துரோகம் போதும். இப்போது உயர்நீதிமன்றமே சுட்டிக்காட்டியுள்ள நிலையில், அ.தி.மு.க. அரசு திருந்த வேண்டும்.
சட்டமன்றத்தின் குளிர் காலக் கூட்டத் தொடரினைக் கூட்டி, அதில், “தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்” என்ற மசோதாவை மீண்டும் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி - ஒப்புதலைப் பெற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் கொடிய நீட் தேர்வு அடுத்து வருவதற்குள், இப்போதே அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழக மாணவர்களைக் காப்பாற்ற வேண்டும்; என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.