சிவசேனாவுடன் கைகோர்த்து நாளையே ஆட்சி அமையும்.. சரத்பவார் உறுதி..

சிவசேனாவுடன், தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் இணைந்து 5 ஆண்டுகளுக்கு ஆட்சி நடத்துவோம். அதற்கு முன்பு தேர்தல் வராது என்று சரத்பவார் தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியது. பாஜக 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் பிடித்தன. ஆனால், முதல்வர் பதவியை சிவசேனா கேட்டது. பாஜக அதற்கு உடன்படவில்லை. இதையடுத்து கூட்டணி முறிந்து ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, தேசியவாத காங்கிரஸ்(என்.சி.பி) மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியமைக்க சிவசேனா முயற்சித்தது. என்.சி.பி 54 இடங்களையும், காங்கிரஸ் 44 இடங்களையும் பிடித்துள்ளன. இவை மூன்றும் சேர்ந்தால் சுயேட்சைகள் தயவின்றியே மெஜாரிட்டி கிடைத்து விடும். நேர் எதிர் கொள்கைகளையுடைய மூன்று கட்சிகளும் எப்படி கூட்டணி சேரும், சிவசேனா எப்படியும் வழிக்கு வரும் என்று பாஜக எதிர்பார்த்தது. ஆனால், பாஜகவை பழிவாங்குவதே முதல் குறிக்கோள் என்றும், முதலமைச்சர் பதவியில் ஒரு நாளாவது சிவசேனா உட்கார்ந்திட வேண்டுமென்றும் சிவசேனா முடிவு செய்தது.

இந்நிலையில், சிவசேனா, என்.சி.பி, காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், ஆட்சியமைக்க குறைந்தபட்ச செயல் திட்டம் மற்றும் ராஜ்யசபா, பஞ்சாயத்து பதவிகளை பிரித்து கொள்வது வரை பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இதற்கிடையே, நாக்பூரில் என்.சி.பி. தலைவர் சரத்பவார் இன்று(நவ.15) கூறுகையில், மூன்று கட்சிகளும் சேர்ந்து கூட்டணி ஆட்சியை நாளையே அமைக்க வாய்ப்புள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. நிச்சயமாக, 5 ஆண்டுக்கு இந்த ஆட்சி நீடிக்கும். இடையே மறுதேர்தல் வர வாய்ப்பில்லை. என்சிபியும், காங்கிரசும் மதச்சார்பற்ற கட்சிகள்தான். அதற்காக சிவசேனாவை ஒதுக்குவதற்கு நாங்கள் இந்துக்களுக்கு எதிரியல்ல. எங்கள் மதச்சார்பற்ற தன்மையைத் தொடர்வோம் என்றார்.


Leave a reply