சோனியா, ராகுலுக்கு எஸ்பிஜி பாதுகாப்பு ரத்து.. மக்களவையில் காங்கிரஸ் எதிர்ப்பு

by எஸ். எம். கணபதி, Nov 19, 2019, 15:35 PM IST
Share Tweet Whatsapp

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு எஸ்.பி.ஜி. பாதுகாப்பு விலக்கப்பட்டதற்கு மக்களவையில் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் போட்டது.

கடந்த 1991ல் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு எஸ்.பி.ஜி.(சிறப்பு அதிரடிப் படை) பாதுகாப்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட வி.வி.ஐ.பி.க்களுக்கு அளிக்கப்படும் இந்த எஸ்.பி.ஜி. பாதுகாப்பு, இது வரை சோனியா, ராகுலுக்கும் அளிக்கப்பட்டு வந்தது.

சமீபத்தில் அவர்களுக்கு எஸ்.பி.ஜி. பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டு, சி.ஆர்.பி.எப். போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அவர்கள் இசட் பிளஸ் பாதுகாப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டனர். எஸ்.பி.ஜி. பாதுகாப்புக்கு மாற்றப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் அப்போதே போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், மக்களவையில் இந்தப் பிரச்னையை காங்கிரஸ் மூத்த உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நேற்று(நவ18) எழுப்பினார். இன்று 2வது நாளாக மக்களவையில் அவர் பேசுகையில், கடந்த 1991 முதல் 2019ம் ஆண்டுக்குள்ளாக பாஜக கூட்டணி ஆட்சி 2 முறை நடந்துள்ளது. ஆனால், சோனியா, ராகுலுக்கு எஸ்.பி.ஜி பாதுகாப்பு விலக்கப்படவில்லை.

இப்போது வேண்டுமென்றே நீக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் இருவரும் மிகுந்த பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள். இதில் அரசியல் கூடாது என்றார். தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுந்து, பழிவாங்கும் அரசியலை நிறுத்து, சர்வாதிகாரத்தை கைவிடு, எங்களுக்கு நீதி வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் அர்ஜுன்ராம் மெஹ்வால் பேசுகையில், ஆதிர்ரஞ்சன் சவுத்ரி இந்த பிரச்னையை நோட்டீஸ் கொடுத்த பின்பே அவையில் எழுப்பியிருக்க வேண்டும். ஜீரோ ஹவரில் இதை எழுப்பக் கூடாது என்று கூறினார்.


Leave a reply