மகாராஷ்டிராவில் யார் ஆட்சி.. நாளை 12 மணிக்கு தெரியும்.. சிவசேனா தகவல்

by எஸ். எம். கணபதி, Nov 20, 2019, 10:39 AM IST
Share Tweet Whatsapp

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைவதில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் முடிவுக்கு வந்து விட்டது. நாளை(நவ.21) மதியம் 12 மணிக்கு யார் ஆட்சி என்பது தெரியும் என்று சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவத் தெரிவித்தாா்.

மகாராஷ்டிராவில் அக்டோபரில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றது. பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. தேர்தலுக்கு முன்பு நடந்த தொகுதி உடன்பாட்டின் போது, சிவசேனாவுக்கு இரண்டரை ஆண்டு காலம் முதல்வர் பதவியை விட்டுத் தருவதாக பாஜக ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

ஆனால், தற்போது பாஜக தனிப்பெரும் கட்சியாக இருப்பதால், முதல்வர் பதவியை விட்டுத் தர மறுத்து விட்டது. மேலும், சிவசேனாவிடம் அப்படி பேசவே இல்லை என்றும் அக்கட்சியினர் பொய் சொல்லுகிறார்கள் என்றும் பாஜக கூறியது. இதனால், இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி முறிந்தது. மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது.

இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து சிவசேனா ஆட்சியமைக்க கடந்த சில நாட்களாக முயன்று வருகிறது. இதற்காக மூன்று கட்சித் தலைவர்களும் பேசி வருகிறார்கள். ஆனால், இதற்கு காங்கிரஸ் தரப்பில் சோனியாகாந்தி எந்த உறுதியும் அளிக்கவில்லை. இதனால், இன்னும் இழுபறி நீடித்து வருகிறது.

இந்நிலையில், சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ரவத் எம்.பி. இன்று கூறுகையில், கடந்த 10, 15 நாட்களாக இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் முடிவுக்கு வந்து விட்டது. நாளை மதியம் 12 மணியளவில் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைவது பற்றி தெளிவான தகவல்கள் வெளியாகும் என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் இன்று பிரதமர் மோடியை நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து பேசுகிறார். அவர் மகாராஷ்டிராவில் ஏற்பட்ட வௌ்ளச் சேதங்களுக்கு நிதி ஒதுக்குமாறு பிரதமரிடம் கேட்பதற்காக சந்திக்கிறார். ஆனாலும், இந்த சந்திப்பின் போது மகாராஷ்டிரா ஆட்சி குறித்து நிச்சயமாக விவாதிக்கப்படும். எனவே, சிவசேனா ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் ஆதரவு தருமா அல்லது பாஜக ஆட்சியமைக்க கைகொடுக்குமா என்பது இன்றே தெரியலாம்.


Leave a reply