அரசியலில் ரஜினியும், கமலும் நிச்சயமாக இணைந்து செயல்படுவார்கள் என்று எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாள் விழா மற்றும் அவரது 60 ஆண்டு கலைப் பயணத்தை கொண்டாடும் வகையில், உங்கள் நான் என்ற இசை நிகழ்ச்சி, சென்னையில் நவ.17ம் தேதி நடைபெற்றது. இதில், ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசுகையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, எடப்பாடி பழனிசாமி, தான் முதலமைச்சர் ஆவோம் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்.
ஆனால், அவர் முதலமைச்சர் ஆனார். அதற்கு அப்புறம் அவருடைய ஆட்சி 20 நாள் தாங்காது, ஒரு மாசம் தாங்காது, மேக்ஸிமம் நாலு மாசம், அஞ்சு மாசத்துல கவிழ்ந்துடும்னு சொல்லாத ஆளே இல்லை. ஆனால், அதிசயம் நடந்தது, அற்புதம் நடந்தது. ஆட்சி கவிழவில்லை. நேற்றும் அதிசயம், அற்புதம் நடந்தது. இன்றும் அதிசயம் அற்புதம் நடந்து கொண்டிருக்கிறது. நாளைக்கும் நடக்கும் என்று கூறினார்.
நடிகர் விஜய் அப்பாவும், டைரக்டருமான எஸ்.ஏ.சந்திரசேகர் பேசுகையில், கமலும், ரஜினியும் அரசியலில் இணைந்து செயல்பட வேண்டும் என்று பேசினார்.
இந்நிலையில், ஒடிசா பல்கலைக்கழகத்தில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்று விட்டு திரும்பிய கமல்ஹாசன், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், ரஜினி சொன்ன அதிசயம் உண்மைதான். நானும், ரஜினியும் இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம். தமிழக மக்களின் மேம்பாட்டிற்கு சேர்ந்து பயணிக்க வேண்டும் என்றால் பயணிப்போம் என்றார்.
இதற்கு பிறகு கோவாவுக்கு செல்வதற்காக விமான நிலையம் வந்த ரஜினி கூறுகையில், தமிழக மக்களின் நலனுக்காக நானும், கமலும் இணையும் சூழல் ஏற்பட்டால், நிச்சயமாக இணைவோம் என்றார்.
இதைத் தொடர்ந்து, தந்தி தொலைக்காட்சி விவாதத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் கூறுகையில், ரஜினி இன்னும் கட்சியே துவங்கவில்லை என்று சிலர் சொல்லுகிறார்கள். அவர் எப்படி கமலுடன் சேருவார் என்று கேட்கிறார்கள். ஒவ்வொரு கட்டமாகத் தான் தாண்டி வர வேண்டும். நான் அந்த விழாவுக்கு முன்பே ரஜினி, கமலிடம் தனித்தனியாக பேசியிருக்கிறேன்.
இருவரும் தனித்தனியாக நிற்பது அவர்களின் பெயரை கெடுத்து விடலாம். வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பதும் சந்தேகப்பட வேண்டியிருக்கும். ரஜினி இவ்வளவு நாளாக அரசியலுக்கு வருவேன் என்று ஏமாற்றி விட்டார். இனிமேலும் அவர் ஏமாற்ற மாட்டார். ரஜினியும், கமலும் நிச்சயமாக இணைந்து செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றார்.