தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்துகளை அஜித்பவார் மோசடியாக பயன்படுத்தி, பாஜக அரசுக்கு ஆதரவு கடிதம் அளித்துள்ளார். ஆனால், எம்.எல்.ஏ.க்கள் யாரும் அவருடன் செல்லவில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர அரசியலில் இன்று அதிகாலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. சரத்பவாரின் அண்ணன் ஆனந்தராவ் பவாரின் மகனும், என்.சி.பி. கட்சியின் சட்டசபைக் கட்சித் தலைவருமான அஜித்பவார், திடீரென பாஜக பக்கம் தாவினார். அவர் பாஜக அரசு அமைக்க ஆதரவு கடிதம் அளிக்க, பாஜகவை ஆட்சியமைக்க கவர்னர் கோஷ்யாரி அழைத்தார். முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் இன்று காலையில் அவசர, அவசரமாக பதவியேற்றார். அஜித்பவார் துணை முதல்வராக பதவியேற்றார்.
இதனால், இன்று அதிகாலை முதல் அம்மாநில அரசியல் களம் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. சிவசேனா தலைமையில் என்.சி.பி, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்றும் உத்தவ்தாக்கரே முதல்வராவார் என்றம் சரத்பவார் நேற்றுதான் வெளிப்படையாக தெரிவித்திருந்தாார்.
ஆனால், ராத்திரிக்குள் எல்லாமே மாறி விட்டது. அதிகாலையில் பாஜக ஆட்சி அமைந்தது எல்லோருக்குமே ஆச்சரியத்தை அளித்தது. இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் நவாப் மாலிக், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எங்கள் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவரான அஜித்பவார் மோசடி செய்து விட்டார். எங்கள் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அவர்களிடம் நாங்கள் கையெழுத்து பெற்று வைத்திருந்தோம். அதை எடுத்து கொண்டு போய், பாஜக அரசுக்கு ஆதரவு கடிதமாக கவர்னரிடம் கொடுத்து விட்டார். உண்மையில், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சரத்பவாருடன்தான் இருக்கிறார்கள்.
இவ்வாறு மாலிக் கூறினார்.