10 எம்.எல்.ஏ.க்கள்தான் அஜித்துடன் போனது.. சரத்பவார் பேட்டி

Sharad Pawar said that, they will take the next step after floor tes

by எஸ். எம். கணபதி, Nov 23, 2019, 14:49 PM IST

அஜித்பவாருடன் 10, 11 எம்.எல்.ஏ.க்கள்தான் சென்றுள்ளனர். நாட்டில் என்ன நடக்கிறது என்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. கட்சித் தாவல் தடைச் சட்டம் அமலில் இருக்கிறதல்லவா? என்று சரத்பவார் கேட்டுள்ளார்.

மகாராஷ்டிர அரசியலில் இன்று அதிகாலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. சரத்பவாரின் அண்ணன் ஆனந்தராவ் பவாரின் மகனும், என்.சி.பி. கட்சியின் சட்டசபைக் கட்சித் தலைவருமான அஜித்பவார், திடீரென பாஜக பக்கம் தாவினார். அவர் பாஜக அரசு அமைக்க ஆதரவு கடிதம் அளிக்க, பாஜகவை ஆட்சியமைக்குமாறு கோஷ்யாரி அழைத்தார். முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் இன்று காலையில் அவசர, அவசரமாக பதவியேற்றார். அஜித்பவார் துணை முதல்வராக பதவியேற்றார்.

இதனால், இன்று(நவ.23) அதிகாலை முதல் அம்மாநில அரசியல் களம் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. சிவசேனா தலைமையில் என்.சி.பி, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்றும் உத்தவ்தாக்கரே முதல்வராவார் என்றம் சரத்பவார் நேற்றுதான் வெளிப்படையாக தெரிவித்திருந்தாார்.

ஆனால், ராத்திரிக்குள் எல்லாமே மாறி விட்டது. அதிகாலையில் பாஜக ஆட்சி அமைந்தது எல்லோருக்குமே ஆச்சரியத்தை அளித்தது. இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும் இன்று பகல் 12.30 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சரத்பவார் கூறியதாவது:

இன்று காலையில் எனது கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிலர் என்னிடம் போனில் பேசினார்கள். ராஜ்பவனுக்கு அஜித்பவாருடன் போய்க் கொண்டிருப்பதாகவும், எதற்காக என்று தெரியவில்லை என்றும் கூறினார்கள்.

அஜித்பவார் எடுத்த முடிவு அவரது தனிப்பட்ட முடிவு. அது எங்கள் கட்சியின் முடிவல்ல. அவருடன் 10, 11 எம்.எல்.ஏ.க்கள்தான் சென்றிருக்கிறார்கள். அஜித்பவார் மீது கட்சியில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

நாட்டில் என்ன நடக்கிறது என்பதே ஆச்சரியத்தை அளிக்கிறது. கட்சித் தாவல் தடைச் சட்டம் அமலில் இருக்கிறதல்லவா?

இந்த சூழ்நிலைகளில் நிலைமைகளை ஆராய்ந்து, சிவசேனா, காங்கிரஸ் கட்சிகளுடன் கலந்தாலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

எங்கள் கட்சியின் 54 எம்.எல்.ஏ.க்களும் பாஜகவை ஆதரிப்பது போல், கவர்னரிடம் தவறாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அடுத்ததாக, சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் எங்கள் பலத்தை காட்டுவோம்.

இவ்வாறு சரத்பவார் கூறினார்.

You'r reading 10 எம்.எல்.ஏ.க்கள்தான் அஜித்துடன் போனது.. சரத்பவார் பேட்டி Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை