சசிகலா விடுதலையாகி வெளியே வந்ததும் அவரிடம்தான் அதிமுகவினர் செல்வார்கள், அவருக்குத்தான் கட்சியை நடத்தும் திறமை இருக்கிறது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி இன்று(நவ.23) காலையில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவரிடம், அரசியலில் ரஜினி-கமல் இணைந்து செயல்படவிருப்பது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர், நடிகர்கள் தமிழகத்திற்காக எதுவும் செய்யப் போவதில்லை. அவங்க சினிமா படம் வெளிவரப் போகிறது. அதற்காக விளம்பரத்திற்காக ஏதாவது பேசலாம். சினிமா வசனங்களை கேட்டு, கேட்டு அலுத்து போயிருச்சு என்றார்.
சசிகலா முன் கூட்டியே விடுதலை செய்யப்படுவாரா என்று நிருபர்கள் கேட்டதற்கு, அது பற்றி எனக்கு தெரியாது. அவர் ஜெயிலுக்கு போறதுக்கு நான் போட்ட வழக்கு காரணமாக இருந்தது என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், சசிகலா இன்னும் ஒரு வருஷம் அல்லது ஒன்றைரை வருஷத்துல விடுதலை ஆகலாம். அவர் வெளியே வந்தவுடன் அதிமுகவினர் அவரிடம்தான் செல்வார்கள். அவருக்குத்தான் கட்சியை நல்ல முறையில் நடத்திச் செல்லும் திறமை இருக்கிறது. அதனால், அதிமுகவினர் அவரிடம்தான் செல்வார்கள் என்று பதிலளித்தார். மகாராஷ்டிரா அரசியல் திருப்பம் பற்றி கேட்டதற்கு தனக்கு அது பற்றி தெரியாது என்று பதிலளித்தார்.