சிவசேனாவை உடைக்கட்டும்.. மகாராஷ்டிரா தூங்காது.. உத்தவ் தாக்கரே ஆவேசம்

by எஸ். எம். கணபதி, Nov 23, 2019, 15:02 PM IST

பாஜக ஆட்சியைக் காப்பாற்ற சிவசேனா எம்.எல்.ஏ.க்களை இழுத்தால், மகாராஷ்டிரா நிம்மதியாக தூங்க முடியாது என்று உத்தவ் தாக்கரே ஆவேசமாக கூறியுள்ளார்.

மகாராஷ்டிர அரசியலில் இன்று அதிகாலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. சரத்பவாரின் அண்ணன் ஆனந்தராவ் பவாரின் மகனும், என்.சி.பி. கட்சியின் சட்டசபைக் கட்சித் தலைவருமான அஜித்பவார், திடீரென பாஜக பக்கம் தாவினார். அவர் பாஜக அரசு அமைக்க ஆதரவு கடிதம் அளிக்க, பாஜகவை ஆட்சியமைக்குமாறு கோஷ்யாரி அழைத்தார். முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் இன்று காலையில் அவசர, அவசரமாக பதவியேற்றார். அஜித்பவார் துணை முதல்வராக பதவியேற்றார்.

இதனால், இன்று(நவ.23) அதிகாலை முதல் அம்மாநில அரசியல் களம் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. சிவசேனா தலைமையில் என்.சி.பி, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்றும் உத்தவ்தாக்கரே முதல்வராவார் என்றம் சரத்பவார் நேற்றுதான் வெளிப்படையாக தெரிவித்திருந்தாார்.

ஆனால், ராத்திரிக்குள் எல்லாமே மாறி விட்டது. அதிகாலையில் பாஜக ஆட்சி அமைந்தது எல்லோருக்குமே ஆச்சரியத்தை அளித்தது. இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும் இன்று பகல் 12.30 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சரத்பவார் கூறுகையில், அஜித்பவார் எடுத்த முடிவு அவரது தனிப்பட்ட முடிவு. அது எங்கள் கட்சியின் முடிவல்ல.

அவருடன் 10, 11 எம்.எல்.ஏ.க்கள்தான் சென்றிருக்கிறார்கள். அவர்களில் மூன்று பேர் இப்போது இங்கே வந்து விட்டார். அஜித்பவார் மீது கட்சியில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

தொடர்ந்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறுகையில், பாஜகவினர் முதலில் வாக்கு இயந்திர விளையாட்டு விளையாடினர். (இப்பவாது ஒப்புக் கொண்டுள்ளாரே!) அவர்கள் இப்போது புதிய விளையாட்டு விளையாடுகிறார்கள்.
இனிமே மக்கள் ஓட்டு போட்டு தேர்தல் நடத்தவே வேண்டியதில்லை. அவர்களே எல்லாம் பார்த்து கொள்வார்கள்.

அடுத்து, அவர்கள் சிவசேனா எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயற்சி செய்வார்கள். சிவசேனாவை உடைக்கட்டும். அதற்கு பிறகு மகாராஷ்டிரா நிம்மதியாக தூங்க முடியாது.
சத்ரபதி சிவாஜி தனக்கு துரோகம் செய்தவர்களையும், முதுகில் குத்தியவர்களையும் என்ன செய்தார் என்பது எல்லோருக்கும் தெரியும் என்று ஆவேசமாகக் கூறினார்.


More India News