மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராக பதவியேற்றதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சிவசேனா, என்.சி.பி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டாக மனு தாக்கல் செய்துள்ளன. இம்மனு நாளை(நவ.24) விசாரிக்கப்பட உள்ளது.
மகாராஷ்டிர அரசியலில் இன்று அதிகாலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. சரத்பவாரின் அண்ணன் ஆனந்தராவ் பவாரின் மகனும், என்.சி.பி. கட்சியின் சட்டசபைக் கட்சித் தலைவருமான அஜித்பவார், திடீரென பாஜக பக்கம் தாவினார். அவர் பாஜக அரசு அமைக்க ஆதரவு கடிதம் அளிக்க, பாஜகவை ஆட்சியமைக்குமாறு கோஷ்யாரி அழைத்தார். முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் இன்று அதிகாலையில் அவசர, அவசரமாக பதவியேற்றார். அஜித்பவார் துணை முதல்வராக பதவியேற்றார்.
இதனால், இன்று(நவ.23) அதிகாலை முதல் அம்மாநில அரசியல் களம் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. சிவசேனா தலைமையில் என்.சி.பி, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்றும் உத்தவ்தாக்கரே முதல்வராவார் என்றம் சரத்பவார் நேற்றுதான் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.
ஆனால், நள்ளிரவில் எல்லாமே மாறி விட்டது. அதிகாலை 5.45 மணிக்கு ஜனாதிபதி ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து, காலை 8 மணிக்கு முதலமைச்சராக தேவேந்திர பட்நாவிஸ், துணை முதல்வராக அஜித்பவார் பதவியேற்றனர். விடிவதற்குள் பாஜக ஆட்சி அமைந்தது எல்லோருக்குமே ஆச்சரியத்தை அளித்தது.
இந்நிலையில், கவர்னரின் முடிவை எதிர்த்தும், அவசர அவசரமாக முதல்வராக பட்நாவிஸ் பதவியேற்றதை எதிர்த்தும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சிவசேனா, என்.சி.பி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டாக மனுவை தாக்கல் செய்தன. அதிகாலை 5.45 மணிக்கு அவசர, அவசரமாக ஜனாதிபதி ஆட்சி விலக்கப்பட்டது ஏன்? பாஜகவுக்கு மெஜாரிட்டி இருக்கிறதா என்று கவர்னர் உறுதி செய்யாதது ஏன்? என்று பல கேள்விகளை மனுவில் எழுப்பியுள்ளனர்.
இம்மனுவை விடுமுறை நாளான நாளை(நவ.24) காலை 11.30 மணிக்கு அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்து கொள்வதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. எனவே, இந்த ஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.