அதிமுகவை பாடாய்படுத்திய சசிகலா குடும்பத்தினர்.. பொதுக்குழுவில் தாக்கிய எடப்பாடி..

Edappadi attacks TTV Dinakaran and family in Admk General council meet

Nov 24, 2019, 17:05 PM IST

டி.டி.வி.தினகரனும் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரும் அதிமுகவை பாடாய்படுத்தினார்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடேஸ்வரா மகாலில் நடைபெற்றது. இதில், முதலமைச்சரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

நாடாளுமன்றத் தேர்தலின் போது, கூட்டணியை ஒருங்கிணைப்பதில் இடைவெளி இருந்ததால் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றோம். அதே சமயம், தேர்தலுக்கு 20 நாட்களுக்கு முன்புதான் கூட்டணி அமைத்தோம். அது வலுவான கூட்டணியாக இருந்தாலும் குறுகிய காலமே இருந்ததால் பிரசாரம் சரியாக செய்ய முடியவில்லை. தமிழக மக்கள் சிறப்பானவர்கள். நாடாளுமன்ற தேர்தலையும், சட்டமன்ற இடைத்தேர்தலையும் பிரித்து பார்த்து வாக்களித்தார்கள். .

அதிமுக அரசு என்ன சாதனை செய்தது என்று ஸ்டாலின் கேட்கிறார், சிறப்பு குறைதீர்க்கும் திட்டம் மூலம் 5.11 லட்சம் மக்களின் குறைகளை தீர்த்துள்ளோம். ஆனால், மத்தியில் 10 ஆண்டுகளுக்கு மேல் கூட்டணியில் இருந்த திமுக, தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் செய்யவில்லை.

என்னுடைய தந்தை திமுகவில் இருந்தவர். 1974ல் முதன் முதலாக அதிமுக கொடிக் கம்பத்தை எனது கிராமத்தில் நட்டேன். உடனடியாக அதை பிடுங்கி எறிந்தனர். அன்று ஆரம்பித்த கொடிக் கம்ப பிரச்சினை இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அதிமுகவை நேரடியாக எதிர்க்கும் தைரியம் ஸ்டாலினுக்கு கிடையாது. அதனால்தான் அரசு ஊழியர்களை தூண்டி விடுகிறார். சிலர் கட்சியே துவங்காமல் பேசுகின்றனர். யார் கட்சி தொடங்கினாலும் எங்களுக்கு கவலை இல்லை.

டி.டி.வி.தினகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிமுக கட்சியை எவ்வளவு பாடாய்படுத்தினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதிமுக அரசு யாருக்கும் அடிமை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசும் போது, அதிமுகவில் வெற்றி இருக்கிறதே தவிர வெற்றிடம் இல்லை. நல்லாட்சியில் வெற்றி பெற்ற நாம் உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என்றார். நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்பட மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானங்கள், தமிழக அரசை பாராட்டும் தீர்மானங்கள் என்று 23 தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.

You'r reading அதிமுகவை பாடாய்படுத்திய சசிகலா குடும்பத்தினர்.. பொதுக்குழுவில் தாக்கிய எடப்பாடி.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை