ஆட்சியமைக்க உரிமை கோரி கவர்னரிடம் சிவசேனா கடிதம்.. என்.சி.பி, காங்கிரஸ் ஆதரவு

by எஸ். எம். கணபதி, Nov 25, 2019, 14:19 PM IST
Share Tweet Whatsapp

சிவசேனா, என்.சி.பி மற்றும் காங்கிரஸ் கூட்டணி தலைவர்கள், கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். தங்களுக்கு 162 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளதாக கடிதம் அளித்தனர்.

மகாராஷ்டிராவில் கடந்த அக்டோபரில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றிருந்தது. ஆனால், 56 எம்.எல்.ஏ.க்களை வென்றிருந்த சிவசேனா கட்சி, முதல்வர் பதவியை கேட்டது. தேர்தல் உடன்பாட்டின் போதே இரண்டரை ஆண்டு காலம் முதல்வர் பதவியை சிவசேனாவுக்கு தருவதாக பாஜக ஒப்புக் கொண்டிருந்ததாகவும் கூறியது.

ஆனால், இதை பாஜக மறுத்தது. 105 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ள பாஜகவின் தேவேந்திர பட்நாவிஸ்தான் முதல்வர் என்று அறிவித்தது. இதை சிவசேனா ஏற்காததால் கூட்டணி முறிந்தது. மெஜாரிட்டிக்கு 145 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற நிலையில், பாஜக ஆட்சியமைக்கவில்லை. ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இதன்பின், தேசியவாத காங்கிரஸ்(என்.சி.பி), காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க சிவசேனா முயன்றது. மூன்று கட்சிகளும் 10 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி இறுதியில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்பார் என்று முடிவு செய்தன. இதை கடந்த 22ம் தேதி மாலையில் என்.சி.பி. தலைவர் சரத்பவார் அறிவித்தார்.

ஆனால், மறுநாள் 23ம் தேதி அதிகாலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. சரத்பவாரின் அண்ணன் ஆனந்தராவ் பவாரின் மகனும், என்.சி.பி. கட்சியின் சட்டசபைக் கட்சித் தலைவருமான அஜித்பவார், திடீரென பாஜக பக்கம் தாவினார். என்.சி.பி. கட்சியின் சட்டசபைக்குழு தலைவராக இருந்த அவர் பாஜக அரசு அமைக்க ஆதரவு கடிதம் அளிக்க, பாஜகவை ஆட்சியமைக்குமாறு கோஷ்யாரி அழைத்தார். முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் இன்று காலையில் அவசர, அவசரமாக பதவியேற்றார். அஜித்பவார் துணை முதல்வராக பதவியேற்றார்.

அதற்கு பிறகு அம்மாநில அரசியல் களம் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்து தங்கள் கூட்டணியில் மாற்றமில்லை என்றனர். மேலும், என்.சி.பி. கட்சியின் 48 எம்.எல்.ஏ.க்கள் சரத்பவாரிடம் உள்ளதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், கவர்னரின் செயலை எதிர்த்து சிவசேனா, என்.சி.பி. மற்றும் காங்கிரஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.வி.ரமணா, அசோக் பூஷண், சஞ்சீவ்கன்னா ஆகியோர் நாளை(நவ.25) தீர்ப்பளிப்பதாக கூறியுள்ளனர்.

இதற்கிடையே, மும்பையில் சிவசேனா, என்.சி.பி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் இன்று கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து ஒரு கடிதம் அளித்தனர். அதில் தங்கள் கூட்டணிக்கு 162 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளதாக கூறி, தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர்.

பின்னர், அசோக்சவான், ஏக்நாத் ஷிண்டே, பாலாசாகேப் தோரட், ஜெயந்த் பாடீல் ஆகியோர் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் பட்நாவிஸ் தோற்று போவார். அப்படி தோற்று விட்டால், உடனடியாக சட்டசபையை கலைக்க மத்திய அரசு முயற்சிக்கலாம். எனவே, நாங்கள் ஆட்சியமைக்க இப்போதே உரிமை கோரியுள்ளோம். எங்களுக்கு சிறிய கட்சிகள் மற்றும் 7 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் சேர்த்து மொத்தம் 162 பேரின் ஆதரவு உள்ளது. அவர்களின் ஆதரவு கடிதத்தை கவர்னரிடம் அளித்துள்ளோம். எனவே, எங்களை ஆட்சியமைக்க கவர்னர் அழைக்க வேண்டும் என்றனர்.


Leave a reply