அஜித்தை வரவேற்ற சுப்ரியா சுலே.. சட்டசபையில் உருக்கம்.

by எஸ். எம். கணபதி, Nov 27, 2019, 11:00 AM IST

சரத்பவாரின் அண்ணன் மகன் அஜித்பவாரை சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே, சட்டசபை வாயிலில் மகிழ்ச்சியுடன் கட்டியணைத்து வரவேற்ற காட்சி உருக்கமாக இருந்தது.

மகாராஷ்டிரா சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால், முதலமைச்சர் பதவியை சிவசேனா கேட்டதால், இரு கட்சிகளுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டு கூட்டணி முறிந்தது.

இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ்(என்.சி.பி), காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க சிவசேனா முயற்சி செய்தது. இதில், சுமுக உடன்பாடு ஏற்பட்டு உத்தவ் தாக்கரே முதல்வராவார் என்று கடந்த 23ம் தேதி மாலையில் சரத்பவார் அறிவித்தார்.
ஆனால், அது வரை அவருடன் இருந்த சரத்பவாரின் அண்ணன் ஆனந்தராவ் பவாரின் மகனும், என்.சி.பி. கட்சியின் சட்டசபைக் கட்சித் தலைவருமான அஜித்பவார், நள்ளிரவில் பாஜக பக்கம் தாவினார். அவர் பாஜக அரசு அமைக்க ஆதரவு கடிதம் அளிக்க, பாஜகவை ஆட்சியமைக்க கவர்னர் கோஷ்யாரி அழைத்தார். முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் மறுநாள் காலையில் அவசர, அவசரமாக பதவியேற்றார். அஜித்பவார் துணை முதல்வராக பதவியேற்றார்.

அதிகாலையில் பாஜக ஆட்சி அமைந்தது எல்லோருக்குமே ஆச்சரியத்தை அளித்தது. சிவசேனா, என்.சி.பி. கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர். காரணம், பலருக்கும் அஜித்பவாரின் முடிவு காலையில்தான் தெரிந்திருக்கிறது.

சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே எம்.பி, தனது வாட்ஸ் அப்பில் ஒரு ஸ்டேட்டஸ் வைத்திருந்தார். அதில், கட்சி, குடும்பம் இரண்டிலும் பிளவு என்று குறிப்பிட்டிருந்தார். பவார் குடும்பத்தினரின் மன உளைச்சலை இது வெளிப்படுத்தியது. மேலும், இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன்பின், பட்நாவிஸ் அரசுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சுப்ரீம் கோர்ட் ஒரு நாள் கெடு விதித்தது. ஆனால், அஜித்பவார் துணை முதல்வர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். பட்நாவிஸ் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, உத்தவ் தாக்கரேவை முதல்வர் பதவியேற்க கவர்னர் அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், அஜித்பவார் இன்று(நவ.27) மீண்டும் என்.சி.பி. கட்சிக்கு திரும்பி விட்டார். சட்டசபைக்கு இன்று காலை வந்த அவரை, சட்டசபை வாயிலில் சுப்ரியா சுலே மகிழ்ச்சியுடன் கட்டித் தழுவி வரவேற்றார். அண்ணனை அவர் வரவேற்ற காட்சி, அருகில் இருந்த என்.சி.பி கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு உருக்கமாக காட்சியளித்தது.

இது குறித்து சுப்ரியா சுலே, நீங்கள் வாழ்வில் யாரை நம்ப வேண்டும்? நான் எப்போதுமே ஏமாற்றப்பட்டதாக நினைக்கவில்லை. இப்போதும் அவரை(அஜித்பவார்) நேசிக்கிறேன். அவர் திரும்பி வந்ததில் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறோம்.. என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அஜித்பவாரும், நான் எப்போதும் என்.சி.பி கட்சியில்தான் இருப்பேன். கட்சியில் இருந்து விலகிச் செல்லவே இல்லை என்றார்.


More India News